அறிவிப்பவரெல்லாம் கலீஃபா ஆகிவிட முடியுமா?

பிரச்சனைகள் 06 அக்டோபர் 2015

கிலாஃபத் என்ற பதம் தற்போது – அறிஞர்கள் முதல் ஆயுதக்குழுக்கள் வரை, 
வல்லரசுகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை 
விவாதிக்கப்படுகின்ற ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியிருப்பதை
நாம் அறிவோம். திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களுக்கும், இயல்பாகவே நிகழும் தவறான புரிதல்களுக்கும் இடையே 'கலீஃபா' யார்?, அந்த பதவிக்கு ஒருவர் தகுதியுடையவராய் மாறுவதற்கு இஸ்லாம் சொல்லும் நிபந்தனைகள் எவை? என்பதை நாம் புரிந்து கொள்ளல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமாகும். ஏனெனில் முறையான ஒரு கலீஃபா முஸ்லிம்கள் மத்தியிருலிருந்து தோன்றிவிட்டால் அவருக்கு கட்டுப்படுவது முஸ்லிம்கள் மீது கட்டாயக்கடமையாகிவிடும் என்ற காரணத்தினால் கலீஃபா என்பவர் யார் என்பது தொடர்பான தெளிவான புரிதல் எம்மிடம் இருக்க வேண்டியது முக்கியமாகும்.
இன்று மேற்குலக ஊடகங்களும், அதனால் பாதிப்புற்ற தமது சுயசிந்தனையை இழந்த எமது ஊடகங்களும் கிலாஃபா என்பதை 21ம் நூற்றாண்டில் தோன்றத்துடிக்கும் கற்கால அரசொன்றாக அல்லது காட்டுமிராண்டித்தனமும், பிற்போக்கும் நிறைந்த ஒரு அரசியல் ஒழுங்கொன்றாக காட்டுவதற்கு பலத்த பிரயத்தனங்களை மேற்கொள்வதை நாம் அறிந்து வருகிறோம். மேற்குலகை பொருத்தவரையில் அவர்களின் தீய அரசியல் மேலாதிக்கத்திற்கும், சுரண்டல் கொள்கைகளுக்கும் கிலாஃபா சிம்ம சொப்பனமாக விளங்கும் என்ற பீதியால் இத்தகைய போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால் மேற்குலகிலிருந்து வந்தால் அது சாக்கடையாக இருந்தாலும், சந்;தனமாக தலையில் தாங்கும் எமது ஊடகங்களும், கருத்தாளர்களும் சுயமான ஆய்வுகளின்றி, நேர்மையான அணுகுமுறையின்றி அனைத்தையும் தரவிறக்கம் செய்யும் பாங்கில் பதித்தும் பரப்பியும் வருகின்றமை மிகவும் கவலைக்கிடமானது.
எனினும் மேற்குலகின் சதிவேலைகளை முறியடிக்கும் வகையில் கிலாஃபாவை ஒரு முக்கிய இஸ்லாமிய கடமையாக கருதும் தன்மையும், அதன் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் அதன் மீள் வருகைக்காக உழைத்து அதனை தமது வாழ்வின் முக்கிய இலக்காக மாற்றும் போக்கும், முஸ்லிம் உலகில் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வாக கருதும் புரிதலும் முஸ்லிம்களை பொருத்தவரையில் அதிவேகமாக வளர்ந்து வருகின்றமை அல்லாஹ்(சுபு) ஒரு தீர்மானகரமான திட்டத்துடன் உம்மத்தை வழிநடாத்திக்கொண்டிருக்கிறான் என்பதை எமக்கு காட்டி நிற்கிறது. எனினும் கிலாஃபா இல்லாத சூழலில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டை கழித்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் கிலாஃபா தொடர்பான புரிதல்களில் மிக அதிகளவான சந்தேகங்களும், தவறுகளும் ஏற்பட்டுள்ளமையை நாம் புரக்கணித்து விடமுடியாது. இந்த குழப்ப நிலை தொடர்ந்து நிலவி வருவதால் இலகுவாக ஒருவர் தாம் தான் கலீஃபா என துணிந்து அறிவித்து விடும் போக்கும் எம்மத்தியில் இருந்து வருகின்றது. எந்தளவிற்கு என்றால் 80களில் ஜேர்மனியின் Metin Kaplan போன்றவர்கள் கூட கலீஃபா பதவிக்கு உரிமை கொண்டாடும் அளவிற்கு இந்த குழப்பம் இருந்து வருகிறது.
கலிஃபாவின் வகிபாகம்

“அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.” (அல் ஹஜ்:41)

இந்த இறைவசனத்தில் சுட்டிக்காட்டப்படும் நான்கு செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு இமாம் தஹ்ஹாக்(ரஹ்) பின்வருமாறு கூறுகிறார்கள், “அல்லாஹ்(சுபு) எவருக்கு உலகின் ஆட்சியதிகாரத்தை வழங்குகிறானோ அவருக்கு இந்த நான்கு செயற்பாடுகளையும் நிபந்தனையாக விதிக்கின்றான்” எனக் குறிப்பிடுகிறார். இமாம் நஸFபி(ரஹ்) கலீஃபாவின் பகிபாகம் குறித்து இன்னும் முழுமையாக பின்வருமாறு சொல்கிறார்கள். “முஸ்லிம்கள் ஒரு இமாமை(கலீஃபாவை) கொண்டிருக்க வேண்டும். அவர்தான் சட்டங்களை அமுல்படுத்துவார், குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றுவார், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பார், படையணிகளை தயார் செய்வார், ஷகாத்தை வசூலிப்பார், கிளர்ச்சிக்காரர்கள், உளவாளிகள், வழிப்பறிக்கொள்ளையர்களுக்கு எதிராக தண்டனைகளை அமுல்செய்வார், ஜும்ஆக்களையும், இரு பெருநாள் தொழுகைகளையும் நிலைநாட்டுவார், அல்லாஹ்(சுபு) அடியார்களுக்கு இடையிலான பிணக்குகளை தீர்த்து வைப்பார், ஒருவர் கொண்டிருக்கும் சட்ட ரீதியான உரிமைகளை நிலைநாட்ட சாட்சியங்களை ஏற்றுக்கொள்வார், இளைஞர்களுக்கும், குடும்பங்களின் ஆதரவு இல்லாத ஏழைகளுக்கும் திருமணங்களை முடித்து வைப்பார், யுத்த வெற்றிப்பொருட்களை பங்கீடு செய்வார். “ (அகீதா அல் நஸபிய்யாஹ்)
எனவே கலீஃபா என்ற பொறுப்பு வெறுமனவே சம்பிரதாய பூர்வமான பதவியல்ல. மாறாக அது ஷரீஆவை பரிபூரணமாக அமுல்செய்வதற்காக மக்கள் மனமுவந்து வழங்கும் பைஆவின் ஊடாக அவர் அதிகாரம் செலுத்தும் எல்லைகள் முழுதும் ஷரீஆவை நிலைநாட்ட ஏற்கப்படும் பாரிய பொறுப்பாகும்.

கலீஃபா எவ்வாறு அவரது பொறுப்பில் அமர்த்தப்படுகிறார்?
மக்கள் வழங்கும் பைஆவின் அடிப்படையில் மாத்திரமே ஒருவர் கலீபாவாக பொறுப்பேற்க முடியும். பைஆ என்ற இந்த வழக்கிற்கு பல ஆதாரங்கள் இஸ்லாத்தில் காணலாம். உதாரணமாக யுனாதா பின் அபி உமைய்யா(ரழி) அறிவிப்பதாக இமாம் புஹாரி ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார், “நாங்கள் உபாதா பின் அஸ்ஸாமித்  அவர்களிடம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் சமூகமளித்துக் கேட்டோம், அல்லாஹ(சுபு) உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! ரஸ}ல்(ஸல்) சொன்ன செய்தியொன்றை எங்களுக்கு அறிவியுங்கள், அது உங்களுக்கு நன்மையாக அமையும் என வினவினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்  “ரஸ}ல்(ஸல்) எங்களை விழித்து அழைத்தார்கள். நாங்கள் அவருக்கு எமது பைஆவை வழங்கினோம். அதன் பிறகு அவர்கள் சொன்னார்கள். எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள பைஆவின் அடிப்படையில் நாங்கள் அவருக்கு செவிசாய்த்து, கட்டுப்பட்டு நடக்க வேண்டும், அது நாங்கள் விரும்புகின்ற விடயமானாலும், வெறுக்கின்ற விடயமானாலும், இலகுவான சந்தர்ப்பமானாலும், கஷ்டமான சந்தர்ப்பமானலும் என்றார்கள். மேலும் எவர்கள் அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவரிகளிடமிருந்து வெளிப்படையான குப்ரை(குப்ர் Bபுவா) கண்டாலே தவிர வேறு எக்காரணத்திற்காகவும் அவர்களுடன் பிணங்கக்கூடாது” எனச் சொன்னார்கள்

மேற்குறிப்பிட்ட கலீஃபா உடன்படிக்கை சில அடிப்படை அம்சங்களில் தங்கியுள்ளது

1. கலீஃபா இஸ்லாத்தை மாத்திரம் கொண்டு ஆட்சி செய்வதற்கு மாத்திரமே ஒப்பந்தம் செய்யப்படுகிறார். இதற்கு மாற்றமாக இவ்வொப்பந்தம் இஸ்லாம் அல்லாத சட்டங்களையும் சேர்த்து நடைமுறைப்படுத்துவதாக அமையுமானால் அந்த பைஆ உடனடியாக ரத்தாகி விடும். கலீஃபா நிரந்தரமாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலகிவிடுவாரானால் அப்போது அவரது ஆட்சி நிராகரிக்கப்பட்டுவிடுவதுடன் அவரை அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கு முயற்சிப்பது முஸ்லிம்களுக்கு பர்ள்ளான கடமையாகிவிடும்.
2. கலீஃபா அவரளவில் சில கட்டாய தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவர் ஒரு முஸ்லிமாக, ஆணாக, பருவமடைந்தவராக, புத்தி சுயாதீனமுள்ளவராக, அடிமையில்லா சுதந்திர மனிதராக, நீதியாளராக, பதவிக்குரிய ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும். இங்கு ஆளுமை என்பது ஷரீஆவை உம்மத்தின் மீது முற்றாக அமுல்படுத்தத் தேவையான பௌதீக, மற்றும் உளவியல் ஆளுமையை குறிக்கிறது.  மேலும் சுதந்திரமானவராய் திகழ வேண்டும் என்பது வேறு யாராலும், அல்லது எந்தவொன்றாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதிக்கம் மிக்கவராய் அவர் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஏழு தகைமைகளும் கட்டாயத் தகைமைகளாகும். மேலும் கலீஃபா ஒரு குறைஷியாக அல்லது முஜ்தஹித்தாக இருக்க வேண்டும் போன்ற சிலர் முன்வைக்கும் நிபந்தனைகள் மேலதிக தகைமைகளே அல்லாமல் அவை நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்று கட்டாயத் தகைமைகள் கிடையாது. அந்த ஏழு நிபந்தனைகள் குறித்து அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், ஏனையவை குறித்து வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிப்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
3. ரஸ}ல்(ஸல்) அவர்களினதும், குலஃபாவுர் ராஸிதீன்களினதும் முன்மாதிரிகளை ஆய்வு செய்தால் பைஆ இரண்டு வகைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அ) பையத்துல் இன்இகத் (உடன்படிக்கை வழங்கும் பைஆ)
ஆ) பையத்துத் தாஅஃ (கட்டுப்படுதலுக்கான பைஆ)
பையத்துல் இன்இகத் (உடன்படிக்கை வழங்கும் பைஆ) பைஆவின் ஊடாகத்தான் கலீஃபா உண்மையில் பதவியில் அமர்த்தப்படுகிறார். இந்த பைஆவே அவரின் பதவிக்கான நியாயாதிக்கத்தை வழங்குகிறது. இந்த பைஆதான் முறைகேடாக பெறப்பட்ட பைஆவையும், செல்லுபடியான பைஆவையும் வேறு பிரிக்கின்றது.
இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது ரஸ}ல்(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பைஆ இத்தகையதே. அதன்போது யத்ரிப்வாசிகளை (யத்ரிப் பின் மதீனா என அழைக்கப்பட்டது) பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய முக்கியமான 72 ஆண்களும், 2 பெண்களும் ரஸ}ல்(ஸல்) அவர்களுக்கு பைஆத்துல் இன்இகத்தை வழங்கினார்கள். இந்த பையத்தில் பங்குபற்றியவர்கள் யத்திரிப்வாசிகளின் தலைமைத்துவத்தையும், அவர்களின் பெரும்பான்மையான பொதுக்கருத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்;கள்.
மேலும் ரஸ}ல்(ஸல்) ஏனைய கோத்திரங்களிடமிருந்து நுஸ்ராவை(பௌதீக உதவி) பெரும் பொருட்டு சந்தித்த வேளைகளில் எல்லாம் அக்கோத்திரத்தவர்கள் உருவாகவிருக்கும் இஸ்லாமிய அரசுக்கு (தவ்லா இஸ்லாமிய்யாஹ்) தேவையான உள்ளக, மற்றும் வெளியக பாதுகாப்பை முழுமையாக வழங்க தகுதியுடையவர்களா என்பதை அறிவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்ததை நாம் அவர்களின் ஸீராவில் ஏராளமாகக் காணலாம். நுஸ்ராவைக்கோரும் இந்த முனைப்பில் இந்த முக்கிய அம்சத்தை முதலில் தீர்மானகரமாக தீர்மானித்து விட்டு பின்னர் அவர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்தி, அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து தவ்லா இஸ்லாமிய்யாஹ்வை நிறுவுவதற்கு தமக்கு பைஆயை வழங்கும்படி கோரிக்கை விடுப்பார்கள்.
இதே போன்றே குலபாவுர் ராஸிதீன்களும் முதலில் சமூகத்தின் செல்வாக்கும், அதிகாரமுமிக்க தலைவர்களிடமிருந்து பைஆவை பெற்றுக்கொண்ட பின்னரே சமூகத்தின் ஏனைய மட்டங்களிடமிருந்து பைஆவை பெரும் வழங்கமுடையவர்களாய் இருந்தார்கள். உதாரணமாக அபு பக்ர்(ரழி) பதவியை பொறுப்பேற்க முன்னர் அன்ஸாரிகளினதும், முஹாஜிர்களினதும் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏறத்தாழ 200 ஆண்கள் பனு சாஅதாவின் கட்டிடத்தில் ஒன்றிகூடி அது குறித்து விவாதித்து அபு பக்ர்(ரழி) அவர்களை கலீஃபாவாக தேர்ந்தெடுத்தனர். அதன் பின்னரே ஏனைய மக்கள் அனைவரும் கட்டுப்படுதலுக்கான பைஆவை மஸ்ஜிதுந் நபவியிலே வழங்கினார்கள்.
எனவே யார் பைஆத்து இன்இகாத்தை வழங்குகிறார்களோ அது சமூகத்தலைமையின் தீர்மானத்தை பிரதிபளிப்பதன் ஊடாக முழுச் சமூகத்தின் பொதுக்கருத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இத்தகைய தலைமைத்துவத்தை வகிப்பவர்கள் அஹ்லுல் ஹல்லி வல் அக்த் (தலைமைத்துவத்தின் முடிச்சை அவிழ்த்துக் கட்டுபவர்கள்) என அழைக்கப்படுகின்றனர். எனவே அஹ்லுல் ஹல்லி வல் அக்த் இனருடைய பைஆவை பெறாத நிலையில் கலீஃபாவுக்கான ஒப்பந்தம் முழுமை பெறாது.
இப்னு அல் ஹஜர் தனது கபத் அல் டிபாரியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். “நவவி மற்றும் ஏனையோர் சொல்கிறார்கள், கிலாஃபா என்பது ஒருவரைத் தொடர்ந்து அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமிப்பதாகும் (Al-Istkhlaf). அது அஹ்லுல் ஹல்லி வல் அக்தினருக்கும் அந்த குறித்த நபருக்கு இடையே நடைபெறும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். அதனூடாக அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அவரைத்தவிர வேறு யாரும் அப்பதவியில் அமர்வதயாய் அது அமையக்கூடாது.”

எனவே அஹ்லுல் ஹல்லி வல் அக்தினர் தான் ஒருவருக்கு அதிகாரத்தில் உதவி செய்பவர்களாகவும், பௌதீக பலத்தையும், அவரின் பதவிக்கு மக்கள் மத்தியில் நியாயாதிக்கத்தையும் வழங்குபவர்களாகவும் உள்ளனர். அதனூடாக அவர் அம்மக்கள் மீது சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டி இஸ்லாமிய முறைமையை முழுமையாக அமுல்படுத்துவார்.
தொடர்ந்தேர்ச்சையாக கிலாஃபா அமுலிலிருக்கின்ற சாதாரண சூழலில் ஒரு கலீஃபாவை தொடர்ந்து இன்னுமொரு கலீஃபா பைஆவினூடாக நியமிக்கப்படுவார். இச்சமயத்தில் இதுவிடயத்தில் ஆலோசனை வழங்குவதற்கான பூரண உரிமை உம்மத்திற்கு வழங்கப்படும். உமர்(ரழி) சொன்னார்கள், “எனவே எவரேனும் ஏனைய முஸ்லிம்களிடத்தில் கலந்தாலோசிக்காமல் ஒருவருக்கு பைஆ செய்திருந்தால், யாருக்கு அவர் முதலில் பைஆ வழங்கினாரோ அவருக்கு ஏனையோரிடமிருந்து பைஆ வழங்கப்பட மாட்டாது...(புஹாரி)
எனினும் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக கிலாஃபா இல்லாத நிலையில் மீண்டும் முதலிலிருந்து ஒரு கலீஃபாவை நியமிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே தற்போது ஷரிஆவை முழுமையாக நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தை பையத்துல் இன்இகத் (உடன்படிக்கை வழங்கும் பைஆ) இனூடாக ஒருவர் பெற்றுக்கொண்டால் முழு உம்மத்தும் அவருக்கு பைஆ செய்யக் கடமைப்பட்டுள்ளது. இங்கு உம்மத்தின் ஆலோசனை பெறப்படவில்லை என்ற அடிப்படையில் அந்த கிலாஃபத் ரத்தாக மாட்டாது. மாறாக இந்த கலீஃபாவின் இடத்துக்கு அடுத்த கலீஃபா ஒருவரை தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தில்தான் உம்மத்தின் அபிப்பிராயத்தை பெற வேண்டும் என்ற நிபந்தனை அமுலுக்கு வரும். மேலும் பைஆ ஒரு சமூகம் எனக்கருதப்படமுடியாத அல்லது அஹ்லுல் ஹல்லி வல் அக்த்தினரிடமிருந்தல்லாத எவரிடமிருந்தும் பெறப்படமுடியார்து. ஆகவே பைஆ, பாகிஸ்தான், துருக்கி, எகிப்து போன்ற நிதர்சனத்தில் நிரந்தரமாக அமைந்த ஒரு சமூகத்தை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அஹ்லுல் ஹல்லி வல் அக்த்தினரிடமிருந்து பெறப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.  அவ்வாறு பெறப்படுமிடத்து ஏனைய பிராந்தியங்களில், அல்லது நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீதும் பைஆ கடமையாகிவிடும். அவர்கள் மொரோக்கோவிலிருந்தாலும் சரி, இன்தோனேசியாவிலிருந்தாலும் சரி. மேலும் எந்த சமூகத்திடமிருந்து ஆரம்பத்தில் பைஆ பெறப்பட்டதோ அந்த சமூகம் அதன் உள்ளக, மற்றும் வெளியக பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய சில அடிப்படை அம்சங்களும் காணப்படுகின்றன என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதன் அவசியம்

கலீஃபா கிலாஃபாவின் அதிகாரத்துக்குள் வாழ்கின்ற மக்களின் மீது சட்டத்தை அமுல்படுத்தும் கடப்பாடுடன் காணப்படுகிறார். அவருக்கு இச்சட்டங்களை அமுல்படுத்தக்கூடிய தகுதியும், அதிகாரமும் அவரிடமிருக்கும் பலத்திலேயே தங்கியுள்ளன. மதீனாவிலே ரஸ}ல்(ஸல்) ஆட்சிசெலுத்திய போது தனது கட்டளைகளை சமூகத்திலே நிலைநிறுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் பல ஒழுங்குகளை நிறுவினார்கள். உதாரணமாக கிலாஃபாவை நிர்வகிக்கக்கூடிய காவற்துறையினரை நியமித்திருந்தார்கள். அனஸ்(ரழி) அறிவிப்பதாக புஹாரியில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.
“கைஷ் பின் சஅத்(ரழி), ஒரு அமீருக்காக இயங்கும் காவற்காரனாக(பொலிஸாக) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு முன்னால் நிற்கக்கூடியவராக இருந்தார்கள்.”

இவ்வாறு ரஸ}ல்(ஸல்) அஹ்லுல் ஹல்லி வல் அக்தினரிடமிருந்து பெற்றிருந்த உண்மையான பாதுகாப்பு அவர்களை சந்திக்க வந்த பல்வேறு கோத்திரத்தவர்களை தங்குதடையின்றி வரவேற்பதற்கும், ஜும்ஆக்களை பகிரங்கமாக நடாத்துவதற்கும், ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் வாராவாரம் போதனை வகுப்புக்களை பகிரங்கமாக நடாத்துவதற்கும், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும், எத்தகைய நிர்ப்பந்தமுமின்றி தீர்ப்பளிப்பதற்கும், இராணுவத்தை அணிவகுப்பதற்கும், அரச கருவூலங்களை நிர்வகிப்பதற்கும், ஆளுநர்களை நியமிப்பதற்கும், அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், சாதாரண பொது மக்கள் அவரை எந்நேரமும் தொடர்பு கொண்டு தமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கும் உரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.
இவ்வாறு உள்ளகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு இன்றியமையாதிருப்பதுடன் அந்தப் பாதுகாப்பை நாட்டு மக்களும் தமது வாழ்வின் அனைத்து மட்டத்திலும் உணரக்கூடியதாக அது அமைய வேண்டும். இதனூடாக தாம் பைஆ வழங்கியவர் பற்றிய தெளிவுடன் மக்கள் இருப்பதுடன் அவரை எந்நேரத்திலும் தட்டிக் கேற்கக்கூடியவர்களாக விளங்குவார்கள்.

அதேபோல கலீஃபா தனது வெளியக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்

இது எதனைக்குறிக்கிறது என்றால் தனது பூரண அதிகாரம் காணப்படும் பகுதியை அவர் வரையறுத்திருக்க வேண்டும். கிலாஃபத் இன்னுமொரு ஆக்கிரமிப்புக்குள் இருக்க முடியாது. அல்லது வெளிநாட்டு சக்திகளால் எந்நேரத்திலும் காவு கொள்ளக்கூடிய ஒரு ஸ்திரமற்ற பகுதியாகவும் அது இருக்க முடியாது. அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து கிலாஃபா சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிகளவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே குறிப்பிடுகின்றான்.

“மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.” (அந்நிஸா:141)

சுருக்கமாக சொல்லப்போனால் உள்ளக, வெளியக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது என்பது கிலாஃபாவை நிறுவதற்கான அடிப்படை நிபந்தனையாகும். ரஹீக் இப்னு கதீர், அயுன் அல் அதர் மற்றும் இன்னும் சில வரலாற்று கிரந்தங்களில் வரும் இந்த சம்பவம் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பனு சைபான் பின் தலபா கோத்திரத்தை ரஸுல்(ஸல்) சந்தித்து தமது தஃவாவுக்கு உதவி புரியுமாறு கோரிய போது அந்த சம்பாசணை ஊடாக அக்கோத்திரத்தவர்கள் இது அதிகாரத்திற்கான கோரிக்கை என்பதை தள்ளத்தெளிவாகப்புரிந்து வைத்திருந்தனர் என்பதை நாம் காணலாம்.
அபுபக்ர்(ரழி) அவர்கள் உருவாக இருக்கும் இஸ்லாமிய அரசினை பாதுகாப்பதற்கு இவர்களுக்கு தகுதியும், பலமும் இருக்கிறதா என அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களின் இராணுவ பலம் குறித்து பின்வருமாறு விசாரித்தார்கள்.
அபுபக்ர்(ரழி) கேட்டார்கள், “நீங்கள் எத்தனை பேர்கள்? அவர்கள் சொன்னார்கள், நாங்கள் மொத்தமாக 1000பேர்கள் இருக்கின்றோம். 1000 என்பது சிறிய தொகையல்ல என்றார்கள். பின் அபுபக்ர்(ரழி) கேட்டார்கள், உங்கள் பாதுகாப்பு நிலவரம் என்ன? அதற்கவர்கள், நாங்கள் காலங்காலமாக போராடி வருபவர்கள், அனைத்து சமூகங்களும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர் என்றனர். மேலும் அபுபக்ர்(ரழி) கேட்டார்கள், உங்களுக்கும், உங்கள் எதிரிகளுக்குமிடையிலான போராட்டத்தின் முடிவுகள் எவ்வாறு இருந்தன? அதற்கு அவர்களின் தலைவர்களில் ஒருவரான மகப்ரூக் சொன்னார், நாங்கள் போராடும்போது மிக ஆக்ரோசமாகப் போராடுவோம், யுத்தம் மிகச்சூடானதாக இருக்கும். யுத்தங்களுக்காக பயன்படுத்தும் குதிரைகளை எமது பிள்ளைகளை விட நாங்கள் பராமரித்து வருகிறோம். பால் தரக்கூடிய மிருகங்களை விட எங்களுடைய ஆயுதங்களை நாங்கள் நேசிப்பவர்கள், எனினும் வெற்றி என்பதோ அது இறைவனிடமிருந்து வரக்கூடியது. சில நேரங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம், சில பொழுதுகளில் அவர்கள் வெல்வதுண்டு.” என்றார்கள்.
அபுபக்ர்(ரழி) அவர்களைத்தொடர்ந்து, தாம் சந்தித்திருப்பவர்கள் அஹ்லுல் ஹல்லி வல் அக்தினர் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட முஹம்மத்(ஸல்) தம்மையும், தமது தூதையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்கள். அவர்களிடத்தில் பௌதீக உதவியான நுஸ்ராவை நபி(ஸல்) வினவியபோது பனு சைபான்கள் தாம் முழு அரபிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் பாரசீகர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்யும் நிலையில் தாங்கள் இல்லை எனக் கூறினார்கள். அதற்கு ரஸுல்(ஸல்) பின்வருமாறு பதிலளித்தார்கள்...

“உங்களிடமிருந்து எந்தவொரு கெட்ட பதிலையும் நான் பெறவில்லை. நீங்கள் உங்கள் கூற்றில் வாய்மையுடையோராய் இருக்கின்றீர்கள். ஆனால் அல்லாஹ்(சுபு) தீனுக்கு யாரேனும் உதவியளிக்க விரும்பினால் அது அனைத்து திசைகளிலிருந்தும் வழங்கப்படவேண்டும்.” எனக்கூறி அவர்களின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்.
இந்த உதாரணங்களும், இதுபோன்ற உதாரணங்களும் இஸ்லாமிய அரசு சொந்தக்காலில் நிற்க முடியாத, ஏனைய புறச்சக்திகளில் தங்கியிருக்கும் நிலையில் உருவாவதை நபி(ஸல்) விரும்பவில்லை என்பதை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல எந்நேரமும் நிலையற்ற எல்லைகளைக் கொண்டும், வெளிநாடுகளால் மிக இலகுவாக கைப்பற்றக்கூடிய எல்லைகளைக்கொண்டும் ஒரு இஸ்லாமிய அரசு உருவாகுவதை அவர் காட்டித்தரவில்லை. ரஸுல்(ஸல்) பனீ ஹஷ்ரஜ்ஜினதும், பனீ அவ்ஸினதும் பௌதீக ஆதரவுடன் அதாவது நுஸ்ராவுடன் எப்போது யத்ரிபிலே இஸ்லாமிய அரசை நிருவினார்களோ அப்போது அந்த அரசின் எல்லைகள் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட்டிருந்தன. நாட்டின் பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் பேணும் நிலையிலும், இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக அமுல்படுத்தும் நிலையிலும் இஸ்லாமிய அரசு இருந்தது. எனவே நபி(ஸல்) ஸுன்னாவின் வழியமைந்த இஸ்லாமிய அரசு என்பது தனது உள்ளக, வெளியக பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சுயமாக மேற்கொள்ளக்கூடிய தகுதியுடனும், இஸ்லாத்தை தனது நிலத்தில் முழுமையாக அமுல் செய்யக்கூடிய ஆளுமையுடனும் இருக்க வேண்டும் என்பதை இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.
முடிவாக...

கிலாஃபா இஸ்லாத்தின் அதியுயர் கடமைகளில் ஒன்று என்பதை நாம் தீர்க்கமாக புரிந்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக ஆயுதமுனையில் தமது ஆளுகைக்குள் ஒரு நிலப்பகுதி வந்தவுடன் தம் மனம்போன போக்கில் அப்பகுதியை கிலாஃபாவாக அறிவிக்கும் அளவிற்கு அதுவொன்றும் நபந்தனைகளற்ற சாதாரண விடயம் கிடையாது. மாறாக கிலாஃபா பிரகடனமொன்று ஷரீஆவின் ஒளியில் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அது உலகெங்கும் வாழும் முஸ்லிம்களையும் பையத்துத் தாஆவினூடாக உள்வாங்கிக் கொள்வதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன என்பதை முழு முஸ்லிம் உம்மத்தும் கருத்திற்கொள்ளல் வேண்டும்.

சட்டபூர்வமான கலீஃபாவுக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளை சுருங்கக்கூறின்...
1. கலீஃபா பைஆவினை பெற்றிருக்க வேண்டும்.
2. இஸ்லாத்தை மாத்திரம் கொண்டு ஆட்சி செலுத்துவதற்காக அவர் உடன்படிக்கை செய்திருக்க வேண்டும்.
3. அவர் தன்னிலையில் சில கட்டாய நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கவேண்டும். அதாவது அவர் ஒரு முஸ்லிமாக, ஆணாக, பருவம் அடைந்தவராக, புத்தி சுயாதீனமுள்ளவராக, பதவிக்கேற்ற ஆளுமையுள்ளவராக, அடிமையற்ற சுயாதீனமுடையவராக, நீதி செலுத்துபவராக இருக்க வேண்டும்.
4.  அவர் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் அல்லது சமூகத்தில் காணப்படும் அஹ்லுல் ஹல்லி வல் அக்தினரிடமிருந்து பைஆவை பெற்றிருக்க வேண்டும்.
5. ஷரீஆவை அதன் முழு வடிவில் அமுல்செய்யும் அதிகாரத்தையும், தனது நிலத்தில் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பலத்தையும் அவர் பெற்றிருக்க வேண்டும்.
6. வெளியகப் பாதுகாப்பை முஸ்லிம்களிடம் காணப்படும் பலத்தை மாத்திரம் உபயோகித்து உறுதிப்படுத்தக்கூடிய தகுதியை அவர் பெற்றிருக்க வேண்டும். அதனூடாக கிலாஃபா தனது எல்லைகளை பாதுகாக்கும் ஆளுமையைப் பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh