முஸ்லிம் தரப்புக்களை விஜயதாச ராஜபக்ஷ சந்தித்தது வெறும் கண்துடைப்பாய் முடிந்துவிடும்!

அறிக்கைகள் 27 நவம்பர் 2016

இலங்கையைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸுடன் இணைந்து இருக்கிறார்கள் என பாராளுமன்றத்திலே கூறி எரிந்து கொண்டிருந்த இனவாதத்தீயில் எண்ணெய் வார்த்த நீதி அமைச்சரும், புத்த சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ, அண்மையில் பொதுபல சேன உட்பட ஏனைய கடும்போக்கு பௌத்த தீவிரவாதக்குழுக்களையும், ஜம்மியத்துல் உலமா உட்பட முஸ்லிம் குழுக்களின் பிரதிநிதிகளையும் வெவ்வேறாக சந்திந்திருந்தார். இச்சந்திப்பு மிகவும் ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது என முஸ்லிம் தரப்பால் கூறப்பட்டது. அதே நேரத்தில் வெறும் இரு மணிநேரமே இடம்பெற்ற இச்சந்திப்பை தொடர்ந்து இனிமேல் முஸ்லிம்களும், பௌத்தர்களும் எமது பிரச்சனைகளை பேசித்தீர்த்துக்கொள்வதுதான் சிறந்தது@ இனவாதமோ, மதவாதமோ பேசுவதில் பலனில்லை என்று கூறிய ஞானசார தேரரின் வார்த்தைகள் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்றத்தில் வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கிளுத்த நீதியமைச்சரும், இனவாதம் கொப்பளிக்கும் ஞானசார தேரர் போன்றவர்களும் ஒன்று கூடி சொற்ப நேரத்துக்குள் தலைகீழாக பேசுகிறார்கள் என்றால் அதனை அரசியல் விழிப்புணர்வுள்ள எவரும் நம்பக்கூடாது. மாற்றமாக இதற்குள் சூழ்ச்சிகளும், சதிகளும் நிறைந்திருக்கின்றன என்ற முடிவுக்கே வர முடிகிறது.

ஐரோப்பிய யூனியன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் கூறியது தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகளை உற்று நோக்கினால் அவை இயல்பாக இடம்பெறுபவைகளாகத் தெரியவில்லை. 2017, ஏப்ரல் மாதத்தில் இடம்பெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கு தேவையான தத்தமது வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ளுவதற்காக ஒன்றேல் மஹிந்த அணியினாலோ, அல்லது அரசாங்கத்தினாலோ தூண்டி விடப்பட்ட நிகழ்வுகளாகவே இவை தெரிகின்றன. அல்லது மஹிந்த தனக்காக ஆரம்பிக்க, அதனை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த சம்பவங்களாகக் கூட இருக்கலாம். எனவே பொதுவாக தேர்தல் காலங்களுக்கு முன்னர் இடம்பெறும் இத்தகைய அரங்கேற்றங்களைக் கண்டு நாம் அதிர்ந்துவிடாமால் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்துதான் எமது நாட்டில் கட்சி அரசியல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை இனவாத்தை அடிப்படையாகக் வைத்து அரசியல் செய்கின்ற வித்தை மாத்திரம் தான் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் தெரியும். எனவே இனவாதம் தேவையான அளவிற்கு தூண்டிவிடப்பட்டு பின்னர் கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் தூண்டி விடப்படுதல் என்ற அரசியல் நரித்தனம் ஒன்றும் இலங்கையில் ஆச்சரியமானதல்ல.

இவ்விடத்தில் முஸ்லிம்கள் சில யதார்த்தங்களையும் உணர வேண்டும். சில காரியங்களில் ஈடுபட வேண்டும்.

இலங்கையில் இனவாதம் நிரந்தரமானது. அதிலும் குறிப்பாக பௌத்த இனவாதம் அரசியல் மயப்பட்டிருப்பதை இலகுவில் மாற்றுவது சாத்தியமற்றது. எனவே காலத்துக்கு காலம் அந்த இனவாதம் உண்மையாகவோ அல்லது குறுகிய கால அடைவுகளுக்காகவோ எம்மை நோக்கி கக்கப்படுவதை தடுக்க முடியாது. எனவே இன்றிருக்கின்ற சூழலில் தலைகீழ் மாற்றம் ஏற்படாமல் இனவாத்தை எவ்வாறு இல்லாது செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருப்பது நேர விரயமாகும். மாறாக அந்த இனவாதம் எம்மீது பாய்கின்ற வீரியத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும், எவ்வாறு அதனை எதிர்கொள்ளலாம் எனவும் சிந்திப்பது மாத்திரமே நடைமுறைச் சாத்தியமானதாகும்.

இலங்கையில் நிலவுகின்ற இந்த அரசியல் யதார்த்தம் இலங்கையை ஆட்டிப்படைக்கின்ற வல்லரசுகளுக்கு நன்றாகவே தெரியும். எனவே இனவாத்தை பாவித்து அவர்களின் நலன்களை அடைந்து கொள்வதற்காக அதனைக் கூர்மையாகவும், பளபளப்பாகவும் அவர்கள் பாதுகாத்து வருவார்கள். அதனையும் மீறி அதனை மழுங்கடிப்பது என்பது மிகவும் கஷ்டமானதாகும்.

இந்த யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு எவ்வாறு இந்த இனவாதத் தீயை நாம் எதிர்கொள்ளலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

1) இனவாதத்தின் காரண கர்த்தாக்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் போட்டுடைக்க வேண்டும். அவர்களின் சூழ்ச்சிகளையும், செயல் வழிகளையும் தோலுரித்துக் காட்ட வேண்டும். இதன் பின்னணியில் வல்லரசுகள் தொடக்கம் கடைநிலையிலுள்ள ஞானசார வரைக்கும் உள்ள தொடர்புகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது இரண்டு நன்மைகளை ஏற்படுத்தும். ஒன்று அது மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்துக்கொண்டு நாடகமாடும் கயவர்களின் மனோதிடத்தை உடைக்கும். இரணடு, மக்கள் தமது தலைமைகளையும், அவர்களது கொள்கைகளையும், அதன் பின்னாலுள்ள சிந்தாந்தங்களையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடு பற்றி சிந்திக்கச் செய்யும்.

2) இனவாதம் தலை விரிக்கின்ற போதும், அது தாண்டவம் ஆடுகின்றபோதும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது வேடிக்கை பார்க்கும் அரசாங்கங்களும், அதன் சட்டமொழுங்கைப் பாதுகாக்கும் நிறுவனங்களும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். அதனூடாக அரசாங்கங்களும் அதன் நிறுவனங்களும் பாரிய அழுத்தத்தை உணர வேண்டும். அவ்வாறு செய்வது மக்கள் இலங்கையின் அரச இயந்திரத்தின் கையாளாகத்தனத்தையும், அது கட்டியெழுப்பப்பட்டுள்ள அடிப்படைகளையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகோலாக அமையும்.

3) மக்கள் மத்தியில் ஏனைய சவால்களைப் போலவே இனவாத்தையும் இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கங்களாலோ, அது கொண்டிருக்கும் கொள்கைகளாலோ முடியாது என்பதை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும்.  இலங்கையில் இனவாத்தை  முற்றாகவே துடைத்தெரியக் கூடிய சக்தி இஸ்லாத்திற்கு மாத்திரமே உள்ளது என்பதை மிக அழுத்தமாக முன்வைக்க வேண்டும்.

இந்த மூன்றையும் நாம் செய்யும் பட்சத்தில்...

ஒன்று, இனவாதிகளின் முகத்திரை கிழிந்து அவர்கள் தம்மை நியாயப்படுத்த முடியாது போகும்.

இரண்டு, அரசாங்கங்கள் தமது சாயம் வெளுப்பதை உணர்ந்து சுதாகரித்துக் கொள்ளும்.

மூன்று, நல்ல மக்கள் இஸ்லாத்தை ஒரு மாற்றீடாக சிந்திக்கத் தூண்டப்படுவார்கள். குறைந்தது அவர்கள் இஸ்லாத்தை எதிர்காதிருப்பார்கள்.

இவை அனைத்தும் இணையும்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் அல்லாஹ்(சுபு)வின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். இன்ஷா  அல்லாஹ்!

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh