யெமனிலிருந்து யுத்த மேகங்கள் என்று விலகும்?

செய்திப்பார்வை 17 செப்டம்பர் 2016

 

முஹம்மத்(ஸல்) கூறியதாக கப்பாப் பின் அல் அறத்(ரழி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழி புஹாரியில் பதியப்பட்டுள்ளது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! சன்ஆவிலிருந்து ஹதரமௌத்திற்கு அல்லாஹ்வைத்தவிர வேறொன்றுக்கும் அஞ்சாத நிலையில் ஒருவர் பயணம் மேற்கொள்ளும் வரையில் இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். தனது செம்மறி ஆடுகளை ஓநாய்கள் காவிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் ஒன்றைத் தவிர. (வேறெந்த அச்சமும் அவருக்கு இருக்காது) ஆனால் நீஙகள் அவசரப்படக்கூடியவர்களாக இருக்கின்றீர்கள்.”

அன்று இஸ்லாத்தால் யெமன் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டபோது மக்கள் இந்த நபிவாக்கை நிதர்சனத்தில் கண்டார்கள்...எனினும் பல நூற்றாண்டுகள் கடந்து இன்று

மீண்டும் அத்தகைய ஒரு நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பே யெமனியர்களின் அங்கலாய்ப்பாய் மாறியிருக்கிறது...

யெமனில் 2015ஆம் ஆண்டில் அதிகரித்த போராட்டங்களினால் இதுவரை 10000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகிலே மிகவும் வறுமைப்பட்ட தேசங்களில் ஒன்றான யெமனின் அண்டை நாடுகள் எண்ணெய் வளம் மிகக் நாடுகள். காலணித்துவ நாடுகளால் போடப்பட்ட செயற்கையான பிரிகோடுகளால் எண்ணெய் வாய்க்கால்களின் வாசலில் வாழ்ந்தாலும் யெமனியர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

மக்களின் நலன் காக்க இங்கே யாரும் ஆட்சி புரிவதில்லை. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளைப் போன்றே சுயநலத்தை மாத்திரமே இலக்காகக் கொண்ட மோசடிக்கார மேட்டுக்குடியினராலேயே தொடர்ந்து ஆழப்பட்டு வருகிறது யெமன். அவர்களோ உலகளாவிய சக்திகளின் பிராந்திய நலன்களுக்காக மக்களை தாரைவார்த்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். இன்று மாத்திரமல்லாது மிக நீண்ட காலமாகவே யெமன் நெருக்கடி நிலையில்தான் இருக்கிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால் அது பிரித்தானியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு நாடு. அரபு வசந்தம் தோன்றி அலி அப்துல்லாஹ் சாலிஹ்ஹை ஆட்சியிலிருந்து தூக்கியெறியும் வரை ஏறத்தாழ அவரது அரசும் பிரித்தானிய ஆதிக்கத்திற்குட்பட்டே இருந்தது. அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவரது அரசு தப்பிப்பிழைத்து ஆட்சியில் நிலைத்தது. புரட்சியின் பின்னர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹும், அவரது கட்சியும் தந்திரமாக அவரது முன்னை நாள் நண்பர் அப்து ரப்புஹ் மன்சூர் ஹாதிக்கு(யெமனுக்கு வெளியே இருக்கும் இவரையே பிரித்தானியா இன்றும் யெமனின் அதிபராக ஏற்றுக்கொண்டுள்ளது) எதிராக போராடுவதற்காக ஹுதி கிளர்ச்சியாளர்;களுடன் இணைந்து கொண்டார்கள்.

பிராந்திய சக்திகளான சவூதியும், ஈரானும் தத்தமது பிராந்திய இலக்குகளை எட்டுவதற்காகவும், யெமனிலே தனது மேலாதிக்கத்தை வேரூன்றச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைக்கு சேவகம் செய்வதற்காகவும் அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களைக் சந்தோசமாக தியாகம் செய்து வருகின்றன. எந்தளவிற்கென்றால் சவூதி அரசு யெமனிலே முஸ்லிம்களைக் கொல்லும் முன்னெடுப்புக்கு நிதியொதுக்குவதற்காக தனது நாட்டு ஊழியர்களின் ஊதியங்களைக்கூட தாரை வார்த்திருந்தது.

அமெரிக்காவும் நீண்ட காலமாக யெமனுக்குள் தனது தீய கரங்களை நுழைத்துத்தான் இருந்தது. முன்னர் யெமனிலே வடக்கு – தெற்கு என்ற பிராந்திய பேதங்களைத் தூண்டிவிட்டு அதிலே குளிர் காய்ந்த அமெரிக்கா பின்னர் தாங்கள் பிராந்தியத்திலுள்ள தீவிரவாதிகளை தேடிப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சாட்டுச் சொன்னது. இந்த முன்னெடுப்புக்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 800 இற்கும் மேற்பட்ட யெமனிய முஸ்லிம்கள் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நாசகார செயலில் பிரி;தானியாவின் பகிபாகமும் பெரியது. மேலும் இவர்கள் தற்போது யெமனிலே பூதாகரமாக உருவெடுத்திருக்கும் ஷிஆ – சுன்னி குறுங்குழுவாதத்தை(Sectarianism) தமது கைக்கூலிகளை வைத்து கனகச்சிதமாக வழிநடாத்தி வருகின்றனர்.

ஒரு கோணத்தில் யெமனின் நிலையும் சிரியாவின் நிலையை ஒத்ததுதான். ஏனெனில் இந்த இரு நாடுகளும்  இன்று வந்தடைந்திருக்கும் நிலைக்குக் காரணம் இவர்கள் சொல்வதைப்போல குறுங்குழுவாதமோ அல்லது இஸ்லாமோ அல்ல. மாறாக பிராந்தியத்திலுள்ள அரசியல் கட்டமைப்புக்கள், அந்த கட்டமைப்புக்களால் வரலாறு நெடுகிலும் மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, பிரான்ஸ் போன்ற காலணித்துவ சக்திகளின் அத்துமீறல்கள், தலையீடுகள் போன்றவைதான் இந்நிலையை தோற்றுவித்துள்ளன. பிராந்தியத்தில் காணப்படும் சட்டபூர்வமற்ற அரசுகளை கொண்ட அரசியல் கட்டமைப்புகளும், இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் உரிமையாக வழங்கியுள்ள அத்தியவசியமான வளங்களை செயற்கையான பிரிகோடுகளால் பிளவுபடுத்தும் தேசிய அரசுகளும், அத்தகைய தேசிய அடையாளங்களால் பிராந்தியத்திலே தோற்றம் பெற்ற மோதல்களும்தான் இத்தகைய அவல நிலைக்கு அடித்தளமிட்டன.

யெமனிலே காலங்காலமாக சைய்யிதி முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடரப்பட்டு வந்த அநீதிகளும், அதனை ஈரான் குறுங்குழுவாத நோக்கங்களுக்காக அல்லாது தனது தீய சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்தமையுமே அவர்கள் இன்று புரட்சியில் ஈடுபட அடிப்படைக் காரணமாக அமைந்தன. சிரியாவை எடுத்துக் கொண்டால் அங்கே மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது பஷார் அல் அஸத் காலங்காலமாக புரிந்து வந்த கொடுங்கோண்மையாகும்.

சரி, எப்போது இந்த கொடுமையெல்லாம் ஒழிந்து அமைதியும், சுபீட்சமும் தோன்றும் என்ற கேள்வி தோன்றுகிறதல்லவா? ஏற்கனவே நான் குறிப்பிட்ட நபிமொழியை முழுமையாகப் பார்த்தால் அதிலே இக்கேள்விக்கு ஒரு பதிலிருக்கிறது.

ஹப்பாப் பின் அல் அரத்(ரழி) அறிவிக்கிறர்கள், நாங்கள், கஃபாவின நிழலின் கீழே தனது புர்தாவில்(போர்த்தும் துணியில்) சாய்ந்து அமர்ந்திருந்த முஹம்மத்(ஸல்) அவர்களிடம் சென்று (முஷ்ரிக்குகள் எங்களுக்கு செய்து வருகின்ற கொடுமைகள் பற்றி) முறைப்பாடு செய்து, எங்களுக்காக அல்லாஹ்(சுபு) விடம் நீங்கள் உதவி தேடக்கூடாதா என வினவினோம். அதற்கு அவர்கள்(ஸல்),

“உங்களுக்கு முன்பிருந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவருக்காக தோண்டப்பட்ட குழியில் நிறுத்தப்பட்டு அவரது தலையில் ஒரு வாள் வைக்கப்பட்டு அவர் இரண்டு துண்டாக துண்டாடப்படும் வரையில் அறுக்கபடுவார், எனினும் அது அவரை தனது மார்க்கத்தை விட்டுவிடத் தூண்டவில்லை. அவரது சதை அவரது எழும்புகளிலிருந்தும், நரம்புகளிலிருந்து வேறாகப் பிடுங்கியெடுக்கப்படும் வரையில் அவரது உடல் இரும்புச் சீம்புகளால் விராண்டி எடுக்கப்படும். எனினும் அது அவரை அவரின் மார்க்கத்தை கைவிட தூண்டவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! சன்ஆவிலிருந்து ஹதரமௌத்திற்கு அல்லாஹ்வைத்தவிர வேறொன்றுக்கும் அஞ்சாத நிலையில் ஒருவர் பயணம் மேற்கொள்ளும் வரையில் இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். தனது செம்மறி ஆடுகளை ஓநாய்கள் காவிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் ஒன்றைத் தவிர. (வேறெந்த அச்சமும் அவருக்கு இருக்காது) ஆனால் நீங்கள் அவசரப்படக்கூடியவர்களாக இருக்கின்றீர்கள்.” (புஹாரி)

இந்த மாற்றத்ததை எட்டுவது என்பது நேர்வழி பெற்ற கிலாஃபத்தை மீள நிலைநாட்டி இஸ்லாத்தின் ஆளுகைக்குள் நாம் மீள வாழ ஆரம்பிப்பது என்பதே. இஸ்லாமிய ஆட்சி என்பது குறுங்குழுவாதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இஸ்லாமிய அரசு சுன்னி அரசோ அல்லது ஷிஆ அரசோ அல்ல. மாறாக வேறுபாடுகளைக்கடந்து தனது குடிமக்கள் அனைவர் மீதும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் அரசே அதுவாகும். இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சி செய்வது என்பது அகீதாவிலும், இபாத்திலும் அரசு ஒரேயொரு நிலைப்பாட்டை(இஸ்லாமிய பனுவல்களில் எல்லைக்குள் அது கருத்து முரண்பாட்டை அனுமதிக்கும்) மாத்திரம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. மாற்றமாக சமூக விவகாரங்களை வழிநடாத்துவதற்கு அரச தலையீட்டைக் கோரும் அவசியமான விடயங்களில் மாத்திரம் அது ஒரு இஸ்லாமிய கருத்தை தேர்ந்தெடுத்து அதனை நாட்டின் சட்டமாக அமூல்செய்வது என்பதே அதன் அர்த்தமாகும்.

உண்மையில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட மோதல்களை குறுங்குழுவாத மோதல்களாக சித்தரிக்கின்ற பொறிக்கள் முஸ்லிம்கள் அகப்பட்டு விடக்கூடாது. அவ்வாறு அகப்படுவது முஸ்லிம்கள் முஸ்லிம்களின் கொலை செய்யும் சைத்தானிய வளையில் வீழ்ந்ததாக மாத்திரம் அது அமையாது. மாறாக அது நடைபெறுகின்ற போராட்டங்களின் உண்மையான காரணங்களை எமது கண்களிலிருந்து மறைத்து விடும்.

இஸ்லாம் எமது வாழ்க்கை நெறியாக அமூலில் இல்லை என்ற அடிப்படை பிரச்சனையை தவிர்த்துப் பார்த்தால்) மோதல்கள் அனைத்துக்கும் அந்நியத்தலையீடுகளே மூல காரணமாகும். குறுங்குழுவாதம் என்பது முஸ்லிம் தேசங்களுக்குள் தமது மூக்கை நுழைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிரித்து ஆளும் கொள்கையின் ஒரு கருவி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

எனவே இத்தகைய தீய தலையீடுகளை தோலுரித்துக் காட்டுவதற்கு முஸ்லிம்கள் தயங்கக்கூடாது. உதாரணமாக பிரித்தானிய அரசாங்கம் சவூதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை செய்வது குறித்து. இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தித்தான் சவூதி யெமனிய சகோதர, சகோதரிகள் மீது குண்டு மழை பொழிகிறது. பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் தரைமட்டமாக்குகிறது.  இவ்வாறு அல் சவூதின் குடும்பத்திற்கு பிரித்தானியா ஆயுதங்களை அணிவித்து அழகு பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அது காலங்காலமாக நடைபெற்ற ஒன்றே. இதுபோன்று வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காகவும், தமது அரியாசனங்களை தொடர்ந்து அலங்கரிப்பதற்காகவும் எமது தலைமைகள் எதனையும் செய்யத் துணிவார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் வாதப்பொருளாக மாற்ற வேண்டும். மேலும் மேற்குலகத் தலையீட்டினால் எமது நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற வார்த்தை ஜாலங்களுக்கு முஸ்லிம்கள் செவிசாய்த்து விடக்கூடாது.   முஸ்லிம்கள் ஒருபோதும் மேற்குலக தலையீட்டை வரவேற்பவர்களாக அல்லது அதனை அனுசரித்துச் செல்பவர்களாக  இருந்து மோதல்களின் அடிப்படை பிரச்சனைக்கு தூபமிட்டுவிடக்கூடாது. அவர்களின் வருகை எப்போதும் எமது நிலைமையை அலங்கோலப்படுத்திள்ளதே தவிர ஒருபோதும் அழகுபடுத்தியது இல்லை என்பதை நாம் ஐயமற புரிந்து கொள்ள வேண்டும். எமது அண்மித்த வரலாறு முழுக்க இந்த உண்மையைத்தான் சான்று பகர்கிறது.

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh