குழு ரீதியான, மத்ஹப் ரீதியான, இன ரீதியான கோடுகளைக்கொண்டு புதிய மத்திய கிழக்கிற்கான வரைபடம்

ஆய்வு 21 ஜனவரி 2016

 

இலங்கையில் ஷியாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தை முன்னைய காலங்களுடன் ஒப்பீடு அடிப்படையில் நோக்கினால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. முன்பு தமது ஷியா அடையாளத்தை மறைத்து இயங்கி வந்த ஒரு சில செயற்பாட்டாளர்கள் தற்போது ஓரளவுக்கு வெளிப்படையாக செயற்படும் நிலை தோன்றியிருப்பது அவர்களின் வளர்ச்சியில் ஒரு மைற்கல்லாகவே பார்க்கப்படுகிறது.


இந்த சூழல் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபடும் பல சகோதரர்களை ஷியாக் கொள்கைக்கு எதிராக எழுதவும், பேசவும் வைத்திருக்கிறது.இந்த ஆதங்கம் சுன்னி முஸ்லிம்கள் முழுமையாக வாழும் நாடொன்றில் எழுவது புரிந்து கொள்ளத்தக்கதுதான். எனினும் இந்த கட்டுரையின் நோக்கம் ஷியாப் பிரிவுகளில் காணப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமான கருத்துக்கள், ஈரான் தலைமையிலான ஷியா உலகு மேற்கொள்ளும் அரசியல் நகர்வுகள் என்பவை பற்றி பேசுவதல்ல. மாறாக முஸ்லிம் உம்மத்துக்குள் காணப்படும் உள்முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் உலகை மேலும் பல்வேறு உப கூறுகளாகப் பிரித்து தமது நவ காலனித்துவ நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற மேற்குலகு எடுக்கும் நவீன யுக்திகள் குறித்து விழிப்பூட்டுவதேயாகும். இந்தப் புரிதல் எமது உள்முரண்பாடுகளை நாம் மிகக் கவனமாக அணுகுவதற்கும், எமது நிதானமற்ற செயற்பாடுகளால் எமது எதிரியின் நிகழ்ச்சி நிரல் வெற்றிபெறுதலைத் தடுப்பதற்கும் மிகவும் அவசியமாகும்.

இன்றைய முஸ்லிம் உம்மத் தான் எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைந்து கொள்வதில் அதிமுக்கிய அரசியல் இலக்குகள் மூன்று இருக்கின்றன. அவை அந்நியர்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதிக்கத்திலிருந்தும், கட்டுப்பாட்டிலிருந்தும் எம்மை முற்றாக விடுவித்துக்கொள்ளல், எமக்கிடையிலான முழுமையான அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தல், தீனுல் இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தைப்பெறல் என்பனவாகும்.

இந்த மூன்று இலக்குகளும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமான தொடர்புடையதும், அவை அனைத்தையும் ஒன்றாக அடைந்து கொள்ள நபிவழியில் மேற்கொள்ளப்படும் கிலாஃபாவை நோக்கிய வேலைத்திட்டத்தினால் மாத்திரம்தான் முடியும் என்பதும் எம்மில் பலர் இன்னும் தெளிவடைய வேண்டிய விடயமாகும். அந்த கிலாஃபாவின் வருகைதான் எமது அரசியல் விடுதலைக்கு உத்தரவாதத்தை தரும், எம்மை வஹி வலியுறுத்தும் 'ஓர் உம்மத்' ஆக கட்டியெழுப்பும் என்ற முடிவுக்கு உம்மத் வரவேண்டியிருக்கிறது.

நிச்சயமாக உங்களது உம்மத்தாகிய இது – ஓர் உம்மதாகும், மேலும் நான்தான் உங்களது 'ரப்' ஆகும். எனவே என்னை வணங்குங்கள்."(அல் அன்பியா:92)

எனினும் முஸ்லிம்களின் அரசியல் ஒன்றுமையும், அதற்கு அடிப்படையான இஸ்லாமும் மேற்குலகின் தீய முதலாளித்துவ சிந்தனைக்கும், காலனித்துவ வெளியுறவுக்குக்கொள்கைக்கும் பாரிய முட்டுக்கட்டை என்பது அவர்கள் ஆரம்பத்திலிருந்தே நன்கு புரிந்து வைத்திருந்த விடயம். எனவேதான் தனது கடைசித் தசாப்த்தங்களில் உத்மானிய கிலாஃபத் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதில் பல தவறுகளை விட்டிருந்த போதிலும், உள்முரண்பாடுகளால் பலகீனப்பட்டிருந்த போதிலும் கூட முஸ்லிம் உம்மத்தின் அரசியல் அடையாளமாகவும், பல சந்தர்ப்பங்களில் அதனைப் பாதுகாக்கும் அரணாகவும் விளங்கியதை மேற்குலகு நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஒரு முடிவு கட்டி விடுவோம் என களத்தில் குதித்தது.

குறிப்பாக பிரித்தானியாவும், பிரான்சும் நடைமுறைப்படுத்திய காலனித்துவ நிகழ்ச்சி நிரலின் முடிவாக முஸ்லிம் உலகு இன ரீதியாகவும்(குர்திகள், துருக்கியர், அரேபியர் போன்ற), குழு ரீதியாகவும் (ஷிஆ, சுன்னி போன்ற) பிளவுபடுத்தப்பட்டது. அவர்களின் வெளிவிவகாரச் செயலாளர்களான சைக் மற்றும் பிகொட் முஸ்லிம் உலகை அதன் தரைத்தோற்றத்திற்கு ஏற்பவும், எண்ணெய் வளத்திற்கு ஏற்பவும் அதிலும் முக்கியமாக நிரந்தர பலகீனத்தை அந்த தேசங்களில் நிறுவும் விதத்திலும் பல முஸ்லிம் குறுநிலங்களாக பிளவுபடுத்தி அதன் எல்லைகளை தமது பென்சிலினால் தீர்மானித்தார்கள்.

இந்த பிளவுகள் காலனித்துவத்தின் அரசியல் பொருளாதார அடைவுகளுக்கு தங்குதடையற்ற மூலமாக மாறியதுடன் அந்நிலங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வில் இருண்ட யுகத்தைத் தோற்றுவித்தன. அதனைத்தொடர்ந்து வந்த தசாப்தங்கள் பிளவுபட்ட குறுநிலங்களில் வாழ்ந்த மக்களின் மனதில் அந்நிலங்களின் மீதான பற்று, தேசப்பற்றாக மாறி ஒவ்வொரு எல்லைகளிலும் தமது தேசத்திற்காக இரத்தம் சிந்தவும், சைக்-பிகொட் வரைந்து கொடுத்த கொடிகளால் தேசபக்தர்களாக கபனிடப்படவும் ஆர்வங்கொண்ட ஒரு சமூகத்தை தோற்றுவித்தது. இஸ்லாத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பல்தேசிய அடையாளங்களால் அறிமுகப்படுத்தப்பட்டனர். எனவே முஸ்லிம்கள் மத்தியில் புறக்காரணிகளால் ஏற்பட்ட நிரந்தரப்பிளவுக்கு ஏதுவான அடையாளங்களை இல்லாதொழிக்கும் கிலாஃபத் நோக்கிய வேலைத்திட்டம் மேற்குலகின் பார்வையில் மிகப்பெரிய சவால். எனவே கிலாஃபத் மீண்டும் தோன்றுவதற்கு முன்னால் அந்த வேலைத்திட்டத்தை அடிப்படையிலேயே தவிடுபொடியாக்கி விடுவதற்கு மேற்குலகு மென்மேலும் முஸ்லிம் உலகை உப கூறுகளாக பிரிக்கும் வேலைத்திட்டத்தில் களமிறங்கியிருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் நிலவிய காலனித்துவ பலச்சமநிலை மாற்றமடைந்து தற்போது அமெரிக்காவின் அதிகாரத்துக்குள் காலனித்துவ ஒழுங்கு சரிந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது அரசியல் இலக்கிற்கு ஏற்றாற்போல் புதிய ஒழுங்கிலான அரசியல் எல்லைகளை முஸ்லிம் உலகில் வரைவதற்கான வேலைத்திட்டத்துடன் ஓரிரு தசாப்பங்களாக நேரடியாக முயற்சித்து வருகின்றது. இந்த மாற்றத்தை உன்னிப்பாக அவதானிக்கும் ஒருவருக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் வட்டங்கள், சிந்தனை மையங்களில் புதிய பிளவு யுக்திகள் குறித்த வாதங்கள் அதிகம் இடம்பெறுவது தென்படாதிருக்காது.

வெளிநாட்டுத்தொடர்புகளுக்கான அமெரிக்க சபையின் (American Council on Foreign Relations)தலைவரான ரிசார்ட் ஹாஸ் மத்திய கிழக்கிற்கான 'புதிய சைக்-பிகொட்' குறித்து தெரிவித்த கருத்து இதனையே சொல்கிறது. பழைய மத்திய கிழக்கு சிதைவடைந்து வருகிறது என்பதை திரும்பவும் வலியுறுத்தியவராக 'புதிய சைக்-பிகொட்' என்பது ஈராக்கில் அமெரிக்கா சந்தித்துவரும் தீவிர நெருக்கடியிலிருந்தும், சிரியாவில் நாம் காட்டிவரும் தயக்கத்திலிருந்தும் அமெரிக்காவை பாதுகாப்பதற்கான தீர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறது." (அல் வகப்த் பத்திரிகை, 17/06/2014)

இவ்வாறு அமெரிக்கா மத்திய கிழக்கில் காணும் கனவை நனவாக்க ஆய்வுகளும், பத்திரிகை அறிக்கைகளும் அண்மைக்காலமாக அதிகளவில் வெளிவருகின்றன. அண்மையில் (19052015 ) அமெரிக்காவில் பூகோள ஆய்வு நிலையம் (American Council on Foreign Relations) " மத்திய கிழக்கை மீள் வரையும் திட்டங்கள்: புதிய மத்திய கிழக்கிற்காக வேலைத்திட்டம்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் அவர்கள் புதிய மத்திய கிழக்கிற்காக வரைபடங்களைக்கூட முன்மொழிகளாக வெளியிட்டிருந்தனர். இது போன்றதொரு அறிக்கையை அவர்கள் 2006 இலேயே வெளியிட்டிருந்தனர். அதேபோல் Sunday Review 28/09/2013 இல் வெளியிட்டிருந்த "மீள்வரையப்பட்ட மத்திய கிழக்கு ஒன்றைக் கற்பனை செய்தல்" என்ற அறிக்கையை இதற்கு இன்னுமொரு உதாரணமாகக் கூறலாம்.

இந்த முன்மொழிவு அறிக்கைகளில் முக்கியமான ஒன்றுதான் 01062006 இல் அமெரிக்க விமானப்படை சஞ்சிகை "இரத்த எல்லைகள்: நல்லதொரு மத்திய கிழக்கு எவ்வாறு தோற்றமளிக்கும்? (Blood Borders – How a better Middle East would look?’)என்ற தலைப்பில்; பிரசுரித்த அறிக்கையாகும். மத்திய கிழக்கை குழு, கோத்திர(இன), மத்ஹப் ரீதியாக நிரந்தரமாகப் பிரித்தல் தொடர்பான இந்த முன்மொழிவை ஓய்வு பெற்ற அமெரிக்க ஜெனரல் ரல்கப் பீட்டர்ஸ் தெரிவித்திருந்தார். உண்மையில் முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி காட்டர் (1977-1981) இன் ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய யூத பின்னணி கொண்ட அமெரிக்க ஓரியன்டலிஸ்ட் பேணார்ட் லூயிஸ் என்பவரால்தான் மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் இத்தகைய திட்டத்திற்கு இரத்த எல்லைகளுக்கான வேலைத்திட்டம் என்ற பெயர் முதல் முதலில் சூட்டப்பட்டது.

அந்த அறிக்கையில் துருக்கியர், குர்திஷ்கள், அரபிகள் மற்றும் ஈரானியர்களுக்கிடையில் தொடர்ந்தேர்ச்சையான போர்களை உருவாக்குவதன் ஊடாகத்தான் மத்திய கிழக்கை மீள வரைய முடியும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருந்தார். இந்த அறிக்கை 1983இல் அமெரிக்க அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்தது.

உண்மையில் ஆரம்பத்தில் இத்தகைய அறிக்கைகள் நீண்டகால இராஜதந்திர திட்டமிடல் என்ற அளவில் இருந்தாலும் தற்போது அந்த முன்மொழிவுகள் பல மட்டங்களில் நடைமுறை செயற்திட்டங்களாhக பயன்படுத்தபட்டு வருகின்றன. பலர் முன்வைத்த முன்மொழிவுகளின் உள்ளடக்கங்களில் சிற்சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனேகர் முன்வைத்த முன்மொழிவுகள் இன, குழு மற்றும் மத்ஹப் ரீதியிலான பிளவுகள் குறித்தே பேசுகின்றன.

இவற்றுக்கு சில உதாரணங்களை குறிப்பிடலாம். உதாரணமாக ஈராக்கை மூன்று சிறிய தேசங்களாக பிரிக்கின்ற திட்டம் இந்த இரத்த எல்லைகள் அறிக்கையில் முன்னமே குறிப்பிடப்பட்டிருந்த ஒன்றுதான். அதன்படி தென் ஈராக்கில் ஷியா அரசு, வட ஈராக்கில் குர்திஷ் அரசு மத்திய ஈராக்கில் சுன்னி அரசு என மூன்று தேசங்களை அது சிபாரிசு செய்திருந்தது. அதன்படி 2003 இல் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் அந்த யோசனை நடைமுறை ரீதியாக அமுல்படுத்தப்பட்டு தற்போது வரை அது நீடித்து வருகிறது. மேலும் சிரியாவில் மத்தியதரைகடல் கரையோரத்தை தழுவிய அலவி அரசு ஒன்றையும், ஹலப் (அலப்போ) பகுதியிலும், டமஸ்கஸ் ஐ அண்டிய பகுதியிலும் சுன்னி அரசுகளையும், கோலன் பிராந்தியத்தில் (Druze) றூஷ்களுக்கான அரசொன்றையும் நிறுவும் யோசனையையும் இவ்வறிக்கை கொண்டுள்ளது. மேலும் எகிப்தை பல சிற்றரசுகளாக மாற்றும் திட்டம் குறித்தும் இது குறிப்பிடாமலில்லை. அதாவது எகிப்தில் சுன்னிகளுக்கான ஒரு தேசத்தையும், வடக்கில் கொப்டிக் கிருஸ்தவர்களுக்கான ஒரு தேசத்தையும், அஸ்வானை தலைநகராகக் கொண்ட நுமியன் அரசொன்றையும், கிராமப்புற அரபிகளுக்கான ஒரு அரசை சீனாய் பகுதிகளிலும், காஷாவை உள்ளடக்கிய மேலுமொரு அரசை வட சினாயிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற முன்யோசனையையும் அது முன்வைக்கிறது. முஸ்லிம் பிராந்தியமான வடஆபிரிக்காவை ஏழு குழு ரீதியான (Sectarian States) அரசுகளாக பிரிப்பதற்கான யோசனையையும் அது கொண்டுள்ளது. பாபர்களுக்கான அரசு, பொலிசாரியன்களுக்கான அரசு என ஏழு அரசுகளை அது முன்மொழிகிறது.

வளைகுடா பிராந்தியத்தையும், அரேபிய தீபகற்பத்தையும் பொருத்தவரையில் தற்போது காணப்படும் நாடுகளை முழுமையாக இல்லாதொழித்து மூன்று சிறிய அரசுகளாக அப்பகுதியை மாற்றும் முயற்சி பற்றி இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. கடார், பஹ்ரைன், குவைத், எமிரேட்ஸ் மற்றும் ஓமானை உள்ளடக்கிய கிழக்கு அரேபியாவில் ஒரு ஷியா அரசையும், நஜ்த்தில் ஒரு சுன்னி அரசையும், ஹிஜாஸில் இன்னுமொரு சுன்னி அரசையும் ஏற்படுத்தும் திட்டத்தை அது முன்வைக்கிறது.

எவ்வாறு முஸ்லிம்களை பல்வேறு திசைகளில் நிரந்தரமாக பிளவுபடுத்தி, அவர்களை ஒருவரோடு ஒருவர் எந்நேரமும் மோதிக்கொண்டிருக்கின்ற கொந்தளிப்பான அரசியல் களத்திற்குள் தள்ளிவிட்டு, முஸ்லிம்களிடம் காணப்படும் விலைமதிப்பில்லாத ஒர் உம்மத் என்ற எண்ணக்கருவை அவர்களிடமிருந்து முற்றாக அகற்றுவதுதான் நேர்வழியில் அமைந்த ஒரு கிலாஃபத்தின் மீள் வருகையை தடுத்து நிறுத்தும், குறைந்தது தாமதப்படுத்தும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனினும் இந்தப்பிளவுகள் நேரடியாக திடுதிப்பென்று நடைபெற வேண்டிய அவசியமில்லை. அல்லது நேரடி ஆக்கிரமிப்புக்களால் மாத்திரம் மேற்கொள்ளப்படவேண்டிய தேவையுமில்லை என அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். மாறாக முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் இந்த பிளவுகள் மென்மையான பிளவுகளாக ஆரம்பித்து, கட்டம் கட்டமாக நகர்ந்து, பல்வேறு குழு, இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களுக்கிடையேயான போர்களாக வளர்ந்து, அந்த போர்களின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க இந்தப் பிளவுகளும் அதிகரிப்பதன் ஊடாக அவை நிரந்தரப்பிளவுகளாக மாறி புதிய சிற்றரசுகளைத் தோற்றுவிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த எண்ணத்தை உண்மைப்படுத்தும் விதமாக முஸ்லிம் உலகில் ஆயுதக்குழுக்களும், சிறுபான்மை இனங்களும், அரசியல் இயக்கங்களும் செயற்பட்டு வருவதை நாம் தாராளமாகக் காணலாம். இதனுடைய ஒரு விளைவுதான் உண்மையில் ஓர் அரசு என்று கூறமுடியாத பேரளவிலான, குறைமாதக்குழந்தைக்கொப்பான சில அரசுகளின் அல்லது அதிகார அலகுகளின் தோற்றங்கள் இந்த பிராந்தியங்களில் தலைகாட்டுகின்றன. இவற்றில் சிலதான் ISIS அறிவித்த இஸ்லாமிக் ஸ்டேட்டும், யெமனில் ஹுதிகளின் பரவலாக்கமும், சிரியக் கரையோரத்தில் அலவிகளின்  மீள்நிலைகொள்ளலுமாகும்.

இவ்வாறு அமெரிக்கா மத்திய கிழக்கை மீள்வரையத் தீட்டிய திட்டத்தை அங்குள்ள தனது கங்காணிகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தி வருவதை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே ஈராக்கிலும், சிரியாவிலும், யெமனிலும் உள்முரண்பாடுகள் சிக்கலான வன்முறையாக வெடித்து விரிவடைந்து வருகின்றன. ஈரானின் அரசியல் வியாபிப்பு, ஷியாயிஸத்தின் எழுச்சி, அவர்களின் பாரசீக வளர்பிறை கனவு தொடர்பாக பீதியைக் கிளறிவிடும் முனைப்புக்கள் மிக அதிகளவில் நடக்கின்றன. அதேபோலவே சவூதியில் வாழும் ஷியா சிறுபான்மையினர் குறித்தும், ஈரானில் வாழும் சுன்னி சிறுபான்மையினர் குறித்த ஒப்பாரிகளும் ஒலிக்கின்றன. மறுபக்கத்தில் குர்திஷ்களின் சுயநிர்ணையப் பிரச்சனை குறித்த வாதங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்வாறு முஸ்லிம் உம்மத்தை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா கையிலெடுத்திருக்கும் இரத்த எல்லைகள் வேலைத்திட்டத்திற்கு அமைவாகவே இன்று நாம் காண்கின்ற குழுக்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான வன்முறைகளின் வளர்ச்சி இடம்பெற்று வருகின்றன. அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது முழுமையான ஆதிக்கத்தையும், தனது நலன்களிற்கான உத்தரவாதத்தையும் நிலைநாட்டும் முகமாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்க காலனித்துவ வரைபடத்துடன் கால் பதித்துள்ளது என்பது நாம் மேலே சொன்ன தகவல்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே இந்த அமெரிக்கச் சதியில் பகடைக்காய்களாக எம்மை பயன்படுத்தப்படுத்த நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதித்துவிடக்கூடாது. எம்மிடையே எழும் குறுங்குழுவாத (Sectarian), இனவாத, மத்ஹப்வாத பேச்சுக்களும், அதனை மேலும் மும்முரப்படுத்தும் தர்க்கங்களும், காட்டிக்கொடுப்புக்களும், அமெரிக்க இரத்த எல்லை வேலைதிட்டத்திற்கு நாம் வெட்டிவிடும் வடிகாலாக அமைந்து விடும் என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும் உம்மத்தின் அதியுயர் இலக்குகளான  நவ காலனித்துவத்திலிருந்தான விடுதலை, அரசியல் ஓற்றுமை, ஷரீஆவின் ஆட்சி என்பனவற்றை அடைந்து கொள்ளும் அபிலாசைக்கு அவை எதிர்மறை செயற்பாடுகளாகும் என்பதை முழு முஸ்லிம் உம்மத்தும் உணர வேண்டும். அந்தவகையில் இலங்கையில் அண்மைக்காலமாக வளர்ந்துவரும் ஷியா – சுன்னி வாதங்கள், முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவும் ஈரானின் செல்வாக்கு பற்றிய அச்சங்கள், சவூதிசார் இயக்கங்களின் ஷியாயிஸத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் என்பன இயல்பான ஒன்றல்ல. அதற்கு அரசியற் காரணங்களும், பூகோள பரிமாணங்களும் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.

 

 

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh