ரஜப் தைய்யிப் அர்துகானின் கட்சியின் வெற்றி அமெரிக்காவின் வெற்றியேயொழிய முஸ்லிம்களின் வெற்றியல்ல!

ஆய்வு 10 நவம்பர் 2015

 

துருக்கியில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி(AKP) தனித்து ஆட்சியமைக்கக்கூடிய நிலையில் வெற்றி பெற்றதையிட்டு எமது

உம்மத்தில் சில தரப்பினர் தமது ஆரவாரத்தை தெரிவித்தனர். இலங்கையிலும் சிலரின் உணர்வுகளில் இந்த வெற்றி பலத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தமை அவர்களின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் தெளிவாகத் தொனித்தன.

நம்பிக்கையிழந்து மனமொடிந்து போயுள்ள முஸ்லிம் உம்மத்திற்கு இவ்வெற்றி ஆறுதல் தரும் சுபசெய்தியாகும், இதனூடாக அல்லாஹ்(சுபு) உம்மத்தின் அழுகுரலுக்கு பதிலளித்திருக்கிறான். கட்டுக்கடங்காது வளரும் சிரியாவின் துயரங்கள், பலஸ்தீன மக்கள் எழுச்சியை அடக்க சியோனிச அரசு நிகழ்த்தும் அடாவடித்தனங்கள், மேலும் ஈராக்கில், எகிப்த்தில் தொடரும் துயரங்கள் என முஸ்லிம் உலகின் அவலங்கள் அனைத்துக்கும் முடிவு கட்டும் பாதையில் இவ்வெற்றி ஒரு முக்கிய மைற்கல் என்றெல்லாம் எம்மில் பல அழைப்பாளர்கள் நம்புவதைக் காண்கிறோம்.

எனவே அர்துகானினதும், அவரது கட்சியினதும் வெற்றி உண்மையில் முஸ்லிம் உம்மத்தினதும், அநீதி இழைக்கப்பட்ட மக்களினதும் வெற்றியா? அல்லது இது வெறும் கானற்கதையா என்பதை ஆராய்வது இது போன்ற அரசியல் முன்னேற்றங்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை எம்முள் வளர்த்துக் கொள்ள உதவும் என்ற அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

முதலில் அர்துகான் தலைமையிலான இன்றைய துருக்கி அடிப்படையில் ஒரு அமெரிக்க கருவி என்பதை நாம் தீர்க்கமாக புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர ஒத்துழைப்பையும், இணக்கப்பாடுகளையும் புரிந்து கொள்வது, உள்நாட்டிலும், அதன் பிராந்தியத்திலும், முழு முஸ்லிம் உலகிலும் துருக்கியின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

துருக்கிய – அமெரிக்க உறவு

இரண்டாம் உலகப்போரின் முடிவோடு அமெரிக்கா முன்னைய காலணித்துவ வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சினுடைய காலணிகளை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் நோக்கோடு களத்தில் குதித்தது. துருக்கியைப் பொருத்தவரையில் அதன் உண்மையான அதிகாரம் இராணுவத்தின் கையில்தான் இருக்கின்றது என்பதை கணித்த அமெரிக்கா பிரித்தானிய சார்பு கமாலிச துருக்கிய இராணுவத்துக்குள் ஊடுருவி அதனை தனது வழிக்குள் கொண்டுவரும் முயற்சியை 1950 களிலிருந்தே தொடங்கியது. இந்த அமெரிக்க – பிரித்தானிய நவ காலணித்துவப்போட்டியில் துருக்கியில் 1960, 1971, 1980, 1997 இல் என பல இராணுவ சதிப்புரட்சிகள் அடுத்தடுத்து இடம்பெற்றன.

நீண்ட இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட துருக்கிய சமூகத்தின் இஸ்லாம் சார்பு நிலையையும், தீவிர மதஒதுக்கலை(Secularism) மக்கள் மத்தியில் இரும்புக்கரம் கொண்டு திணித்த காமாலிச இராணுவ ஆட்சியின் மீது எழுந்திருந்த வெறுப்பையும் அமெரிக்கா நன்கு உணர்ந்திருந்தது. இராணுவத்தின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஜனநாயக கட்டமைப்புக்களையும், குறிப்பாக பொலிஸ் அதிகாரங்களையும் அதிகரிக்கும் வேலைத்திட்டத்தையும் அமெரிக்கா, 1983 இல் பிரதமராகவும் பின்பு 1989இல் துருக்கியின் அதிபராகவும் பொறுப்பேற்ற அதிபர் துர்கத் ஒஷ்ஷாலை பயன்படுத்தி மேற்கொண்டது. ஒஷ்ஷால் அடிப்படையில் ஒரு இஸ்லாமியவாதியாக இருந்தமை மக்கள் ஆதரவு அவருக்கு பெருகுவதற்கு ஏதுவாய் அமைந்ததுடன் அவர் அமெரிக்காவின் கருவியாக செயற்பட்டமை அவரை விரையில் வளர்த்து விட்டது.  இராணுவத்தின் அதிகாரங்களை வேறு பலமையங்களை நாட்டுக்குள் உருவாக்குவதன் ஊடாக ஒரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவர் வெற்றியும் பெற்றார். விளைவு அவர் தீடீரென மரணமானார். பிரித்தானிய எஜமானர்களுக்காக துருக்கிய இராணுவமே அவரை படுகொலை செய்தனர் என்ற கருத்தும் அப்போது பலமாகப்பேசப்பட்டது.

ஒஷ்ஷாலின் மறைவுக்கு பின்னர் அவரது தாய்நாட்டுக்கட்சியில்(Motherland Party) பிரித்தானிய சார்பு மேசுத் யில்மாஷ் என்பவரை தலைவராக்குவதில் இராணுவம் வெற்றிபெற்றது. யில்மாஷ், ஒஷ்ஷாலின் விசுவாசிகளை கட்சியிலிருந்து விரட்டியடித்தார். இவ்வாறு கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஒஷ்ஷால் சார்பு, அமெரிக்க சார்பு உறுப்பினர்கள் அப்போது அரசியற்களத்திலிருந்த ரபாஹ் கட்சியில் (Welfare Party) தமது இஸ்லாமிய சார்பு சிந்தனைப்போக்கு காரணமாக இணைந்து கொண்டனர். ரபாஹ் கட்சியின் தலைவராக செயற்பட்ட நெஜ்முத்தீன் அர்பகான் பிரித்தானிய சார்பானவராக இருந்தபோதிலும், புதிதாக இணைந்த முக்கிய ஒஷ்ஷாலின் ஆதரவாளர்களால் அமெரிக்காவின் ஆதிக்கம் ரபாஹ் கட்சிக்குள் அதிகரித்தது. விளைவு ஏற்கனவே அமெரிக்க சார்பு கட்சியான சத்திய பாதை (True Path Party) கட்சியும், தற்போது அமெரிக்க ஆதிக்கம் நுழைந்துள்ள ரபாஹ் கட்சியும் இணைந்து ஒரு கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமெரிக்க ஆதிக்கம் நாட்டில் வளர்ந்து வருவது ஒஷ்ஷாலின் தசாப்த்தத்தை இராணுவத்திற்கு ஞாபகமூட்டியது. உடனே உஷாரடைந்த பிரித்தானிய சார்பு இராணுவம் 1997 இல் பெப்ரவரி புரட்சியின் (1997, February Coup) ஊடாக தனது ஆதிக்கத்தை

மீண்டும் நிலைநாட்டியது. பின்னர் முதலாவதாக இராணுவம் செய்த வேலை ரபாஹ் கட்சியை களைத்துவிட்டு நல்லோழுக்க கட்சியாக(Virtue Party) அதனை உருமாற்றிவிட்டு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க சார்பாக செயற்பட்ட ஒஷ்ஷாலின் ஆட்களையும், பிற்காலத்தில் அமெரிக்க சார்பு கொள்கையைக் உள்வாங்கிக்கொண்ட அர்துகான், அப்துல்லாஹ் குல் போன்றவர்களையும் கட்சியை விட்டு நீக்கியது. இராணுவத்தின் செல்வாக்கையும், அதன் பிரித்தானிய சார்பு நிலையையும் நேரடியாக முரண்பட்டு குறைக்க முடியாது என்பதை அனுபவத்தால் உணர்ந்த அமெரிக்கா மாற்று வழிகளை ஆராய்ந்தது. இறுதியில் ஜனநாயக நீரோட்டத்தை நோக்கி மக்களை தூண்டி விடுவதுதான் இராணுவத்தின் இறக்கைகளை ஒட்ட நறுக்க உகந்த வழி என அது கணக்குப்போட்டது. தனது சகாக்களில் ஒருவரை பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்ற தலைவராக்கி, புதிய சட்டவாக்கத்தினூடாக இராணுவத்தின் அதிகாரத்துக்கு சவால்விட அது நினைத்தது. இந்த முக்கிய பணிக்காக அமெரிக்கா களமிறக்கிய இரு பிரதான நபர்கள்தான் ரஜப் தைய்யிப் அர்துகானும், அப்துல்லாஹ் குல்லுமாகும்.

அர்துகானும், அப்துல்லாஹ் குல்லும் இணைந்து நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சியை(AKP) உருவாக்கினார்கள். அர்துகான் அதன் தலைவரானார். அர்துகான் அடிப்படையில் ஒரு மதஒதுக்கல் (Secularist) சிந்தனை கொண்டவரென்றாலும், ஒஷ்ஷாலை ஒத்த வெளிப்படையான சில இஸ்லாமிய சார்புநிலை அவரிடம் காணப்பட்டமை மக்கள் அலையை அவர் பக்கம் சாய்க்க ஏதுவாய் அமைந்தது. இன்தான்புல்லில் அர்துகான் மேயராக இருந்த காலத்திலிருந்தே அமெரிக்கா அவரை வளர்த்ததெடுத்து வந்தது. அவரை துருக்கிய அரசியலின் மையத்துக்கு கொண்டு வருவதற்கு தருணம் பார்த்திருந்த அமெரிக்கா, தனது முக்கிய காய்நகர்த்தலாக 2001 ஆம் ஆண்டில் தனக்கு சொந்தமான 5 - 7 பில்லியன் அமெரிக்கா டொலர்களை துருக்கிய மத்திய வங்கியிலிருந்து மீளப்பெற்றது. விளைவு துருக்கிய நாணயம் லிராவின் பெறுமதி சடுதியாக சரிந்தது. மக்களின் கொள்வனவு சக்தி படுமோசமான நிலையை அடைந்தது. மக்களின் அதிருப்த்தி உச்ச கட்டத்தை அடைந்து மக்கள் அப்போது ஆட்சியிலிருந்த எஜெவித்தின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார்கள். இதனைத்தொடர்ந்து 2002, நவம்பர் 3ஆம் திகதி புதிய அரசாங்கத்திற்காக தேர்தலை துருக்கி சந்திக்க நேரிட்டது. ஏற்கனவே அமெரிக்காவின் பூரண அனுசரணையுடன் இயங்கிய நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி அதிஅமோக வெற்றியை ஈட்டி தனித்து ஆட்சியமைக்கும் நிலையை அடைந்தது.

 

அடுத்து, பிரதமரான அர்துகான் முதல் வேலையாக 'அமெரிக்காவுடனான உறவை ஸ்திரப்படுத்தல்' என்ற தனது கொள்கையில் கவனம் செலுத்தியதுடன், துருக்கியில், குறிப்பாக இராணுவத்துக்குள் பிரித்தானிவுக்கு காணப்படும் செல்வாக்கை தளர்த்தும் முனைப்பில் ஈடுபடலானார். சில கட்டமைப்பு சீர்திருத்தங்களை இந்த இலக்கிற்காக அவர் நடைமுறைப்படுத்தி சில ஆண்டுகள் கழிந்தன. அடுத்த முக்கிய மைற்கல்லாக, “Shared Vision Document - பொது இலக்கு ஆவணம்” என்ற பெயரில் துருக்கிக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 2006, ஜீீீீலை 5ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. அதிலே அப்துல்லாஹ் குல்லும், கொண்டலீசா ரைசும் கையொப்பமிட்டார்கள். இந்த ஒப்பந்தம் குறித்து அதே நாளே அமெரிக்க அரச திணைக்களத்தில் ஒரு ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஆரம்ப வரிகள் கீழ் கண்டவாறு அமைந்திருந்தன. “சமாதானம், ஜனநாயகம், சுதந்திரம், மேம்பாடு போன்ற பிராந்திய மற்றும் பூகோள இலக்குகளை பொருத்தவரையில் நாங்கள் இருவரும் ஒரே விழுமியங்களையும், ஒரே பார்வைகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.” இந்த ஆரம்ப வார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வொப்பந்தம் மேலும் பல விடயங்களை விளக்கியது. அது உள்ளடக்கிய முக்கிய தலைப்புக்களை கீழே தருகிறேன்.

அமெரிக்காவும், துருக்கியும் கீழ்வரும் விடயங்களில் பரஸ்பரம் இணைந்து பணியாற்றும்.

 • ஜனநாயக அரசுகளை உட்சாகமூட்டுவதன் ஊடாக பரந்த மத்திய கிழக்கிலே சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் ஊக்கிவிப்போம். (குறிப்பு: அமெரிக்கா சொல்லும் ஜனநாயம் எது என்பதை நான் சொல்லி நீங்கள் புரிய வேண்டியதில்லை. 2003, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பின்பு ஈராக்கில் மட்டும் அமெரிக்க ஜனநாயகம் 2 மில்லியன் உயிர்களைக் குடித்தது)
 • அரபு - இஸ்ரேலிய முரண்பாட்டிற்கு இறுதித்தீர்வு காண்பதற்காக சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவை நல்குவதுடன் அதனை இரு அரசுகள்(Two State Solution) என்ற தீர்வின் (இதுதான் பலஸ்தீனம் தொடர்பான அமெரிக்கக் கொள்கை) அடிப்படையில் தீர்ப்பதற்கும் ஆதரவு அளித்தல்
 • இணைந்த ஈராக்கில் ஸ்திரத்தன்மையையும், ஜனநாயகத்தையும்,  மேம்பாட்டையும் அபிவிருத்தி செய்வதில் உதவுதல்
 • ஈரானிய அணுவாயுத பிரச்சனை மற்றும் P5+1 ஐ இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒத்துழைத்தல்
 • கருங்கடல் பிராந்தியம், கவ்கஸஸ், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் ஸ்திரத்தன்மையையும், ஜனநாயகத்தையும், மேம்பாட்டையும் அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைத்தல்
 • சைப்பிரஸ் விவகாரத்தில் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க முழுமையான இறுதித் தீர்வை ஐ.நா வின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளுக்கும், வடதுருக்கிய சைப்பிரஸின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகளை நீக்கும் முயற்சிகளுக்கும் ஆதரவு அளித்தல்.
 • மாற்று மூலங்களையும், கஸ்பியன் கடல் சுரங்கக் குழாய் மார்க்கங்கள் உட்பட ஏனைய மார்க்கங்களையும் உருவாக்குவதன் மூலமாக, சக்தி மூலங்களை பாதுகாக்கும் தரத்தை உயர்த்துதல்
 • அட்லாந்திக் சமுத்திர பிராந்தியத்துக்குள் உறவுகளை பலப்படுத்துவதுடன், நேட்டோவை நவீனபயப்படுத்தல்
 • பயங்கரவாதத்திற்கு எதிராகவும்(அமெரிக்க பரிபாஷையில் War on Terror = War on Islam என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என்று நம்புகிறேன்), குர்திஷ் தொழிலாளர் கட்சியினர் உட்பட ஏனைய தீவிரவாதிகளுக்கு எதிராகவும் போராடுதல்.
 • பேரழிவு ஆயுதங்கள் (WMD) பரவுவதை தடை செய்தல்
 • ஆட்கள்;, ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடைசெய்தல்
 • மதங்களுக்கும், கலாசாரங்களுக்கும் இடையேயுள்ள மதிப்பையும், கௌரவத்தையும் மேம்படுத்தல்
 • இரு தரப்பினரும் பொதுவாக எதிர்நோக்கக்கூடிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், முழு உலகிற்கும் சவால் விடக்கூடிய விடயங்களை கையால்வதற்கும் நிலையான, வினைத்திறணுள்ள, இணைமுயற்சிகளை உருவாக்குதல், ஆதரவளித்தல்.

இந்த அறிக்கையின் உள்ளடக்கம் பிராந்தியத்திலும், பூகோள அளவிலும் ஏறத்தாழ அனைத்து விடயங்களிலும் அனைத்து மட்டங்களிலும் அமெரிக்க நிர்வாகவும், அர்துகானின் அரசாங்கமும் இணைந்து பணியாற்றுகின்றன என்பதை எடுத்துக் காட்டுவதற்கு போதுமானது என்று நினைக்கிறேன்.

துருக்கி - இஸ்ரேலிய உறவு

2009 காஷாவில் இஸ்ரேல் புரிந்த அராஜகம் தொடர்பாக சிமோன் பெரசுடன் தர்க்கித்திக்கொண்டு உலக பொருளாதார போரத்தின்(World Economic Forum) மாநாட்டின் மேடையிலிருந்து வெளிநடப்புச் செய்த சம்பவம் அர்துகானை ஒரு வீர புருஷனாக துருக்கியிலும், முஸ்லிம் உலகிலும் பலர் பிரச்சாரம் செய்ய வழிவகுத்தமை எமக்குத் தெரியும். இது போன்ற கதாநாயக செயல்களிலும், சூடான எச்சரிக்கைகளை இஸ்ரேலை நோக்கியும் வீசுவதிலும் அர்துகான் பெயர் பெற்றவர் என்பதை அரசியல் அவதானிகள் எவரும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அர்துகானின் வாய்ச்சாடல்களையும், AKP இனரின் சில செயற்பாடுகளையும் கண்டு இன்றைய துருக்கி இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வருவதாக சிலர் கற்பனை செய்யலாம். அல்லது நிறுவ முற்படலாம். ஆனால் யாதார்த்தம் இந்த நிலைக்கு தலை கீழானது என்பதையே துருக்கியின் கொள்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக அதன்  பொருளாதாரக் கொள்கையையோ, வெளிவிவகாரக் கொள்கையையோ நடுநிலையாக ஆராயும் ஒருவருக்கு இந்த உண்மை மிக இலகுவாகப் புலப்படும்.

 

உண்மையில் துருக்கிய - இஸ்ரேலிய நெருக்கமான உறவின் வரலாறு இஸ்ரேலின் உருவாக்கத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் கழிய முன்னரே 1949 இல் துருக்கி இஸ்ரேலை அங்கீகரித்து விட்டது. இஸ்ரேலை அங்கீகரித்த முதலாவது முஸ்லிம் நாடு என்ற பெருமையும் துருக்கியைத்தான் சாரும். வரலாறு அங்கிருந்து தொடர்ந்தாலும் அர்துகான் தலைமையிலான துருக்கி தொடர்பாக இஸ்ரேல் எந்த நிலைப்பாட்டில் இருந்து வருகிறது என்பதை ஆராய்வதே எமது முக்கிய நோக்கமாகும்.

 

அர்துகான் ஆட்சிக்கு வந்து சில வருடங்கள் கழிந்ததற்கு பின்னால் 2006ஆம் ஆண்டில் இஸ்ரேலின் வெளிநாட்டமைச்சு தனது நாட்டுறவுகளுக்கான மதிப்பீட்டில் துருக்கியுடனான உறவை ”பரிபூரணமானது” என்று மதிப்பிட்டிருந்தமை இந்தக் கேள்விக்கு சிறந்த பதிலாகும். மேலும் துருக்கி, இஸ்ரேலுடனான வர்த்தப் பங்காளிகளில் பிராந்தியத்தில் முதலாவது இடத்திலும், உலகில் இரண்டாவது இடத்திலும் அர்துகானின் ஆட்சிக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு அடுத்த நிலை என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இடைக்கிடையே வெளிரங்கமாக ஏற்பட்ட கருத்துமோதல்களால் இந்த தரவுகள் சில படிகள் ஏறியிரங்கினாலும் இன்று வரை பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய வர்த்தகப் பங்காளி துருக்கிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கிடையே கொக்கக்கோலாவை குடிப்பது, பலஸ்தீனர்களின் குருதியை பருகுவதைப்போன்றது, இஸ்ரேலிய பொருளாதாரத்தில் பங்களிப்பது செய்வது பாரிய ஹராம் என்றெல்லாம் கோஷம் எழுப்பி இலங்கையில் பிரசாரம் செய்யும் தரப்புக்கள் வெளிப்படையாகவே இஸ்ரேலின் பொருளாதாரத்தின் அடிப்படை அச்சாணியாக விளங்கும் துருக்கியையும், அதன் தலைவரையும் தலையில் வைத்து ஆடுவதுதான் நகைப்புக்கிடமாகத் தெரிகிறது.

இஸ்ரேல் - துருக்கிக்கிடையிலான வருடாந்த வணிகம் ஐந்து பில்லியன் டொலர்களைத்தாண்டுகிறது. The Media Line இரு நாடுகளின் அதிகாரபூர்வ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இது குறித்து அண்மையில் இவ்வாறு எழுதியிருந்தது. “ அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் கடந்த 5 வருடங்களுக்குள் இரு நாடுகளுக்குமிடையிலான வணிகம் முன்பிருந்ததைவிட இரண்டு மடங்கையும் தாண்டிய நிலையில் 5.6 பில்லியன் டொலர்களை காட்டுகிறது.“ இந்தக் காலப்பகுதிக்குள்தான் காஸா படுகொலைகளை இஸ்ரேல் புரிந்திருந்ததும், துருக்கியின் (Flotilla)புளோடிலா உதவிக்கப்பல் படுகொலையை நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலினால் சில அத்துமீறும் சம்பவங்கள் இடம்பெறும் போது இஸ்ரேலை “War Criminals - யுத்த குற்றவாளிகள்” என்று துருக்கியும், துருக்கியை (Anti Semitic Bully -  யூத இனத்துக்கு எதிரான சேட்டைக்காரர்கள்) என்று இஸ்ரேலும் கூறி காரமான வார்த்தைகளால் மோதிக்கொண்டாலும் அவர்களுக்கிடையிலான நிரந்த உறவுகளில் இவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை கூட வளர்ந்துள்ளதேயொழிய தாழவில்லை. துருக்கியானது,  இஸ்ரேலுக்கு உருக்கு, எண்ணெய் தொடக்கம் உணவு, பாணவகைகள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்கள் அணியும் இராணுவ சீருடைகள் வரை ஏற்றுமதி செய்கிறது. இஸ்ரேல் பெருந்தொகையான இராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை துருக்கிக்கு வழங்குகிறது.

மேலும் தமது வர்த்தக உறவு குறித்து இதே பத்திரிகைக்கு கருத்துச்சொன்ன இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சு பேச்சாளர் இமானுவேல் நெக்ஷன் “துருக்கினதும், இஸ்ரேலினதும் பொருளாதாரம் ஒருவரை ஒருவர் ஈடு செய்வதுடன் எமக்கிடையிலான வர்த்தக உறவுகள் செழித்தோங்கியுள்ளன. அது மிகச் சிறந்த செய்தியாகும்”.

இது தவிர துருக்கிக்குள் நுழைந்து, யூத பண முதலைகளும், பெரும்பெரும் கம்பனிகளும் தங்குதடையின்றி சுரண்டும் வாசலையும் அர்துகான் திறந்துவிட தவறவில்லை.

துருக்கியிலிருந்து இஸ்ரேலுக்கு சுரங்கக் குழாய் வழியாக நீர், மின்சாரம், இயற்கை வாயு, எண்ணெய்யை மற்றும் ஃபைபர் ஆப்டிக்ஸ்களை விநியோகம் செய்வதற்கான பல மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த சக்தி மற்றும் நீர் போக்குவரத்து நிர்மாண வேலைத்திட்டம் தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக ஜெருசலம் போஸ்ட் பத்திரிகை சில வருடங்களுக்கு முன் எழுதியிருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான அடிப்படை களத்திட்டங்களில் துருக்கியும், இஸ்ரேலும் இறங்கி பணியாற்றி வந்தன. புளோடிலா முரண்பாடோடு இந்த வேலைத்திட்டத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் தற்போது மத்தியதரைக்கடல் சுரங்கக்குழாய் வேலைத்திட்டம் என அழைக்கப்படும் இந்த ஐந்து சுரங்கக் குழாய்த் தொடர்களை பதிப்பதற்கான வளச்சாத்திய ஆராய்ச்சியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தற்போது இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய நிர்மாணக்கட்டமைப்பு அமைச்சர் பென்ஜமின் பென்எலிஷரை அண்மையில் சந்தித்த துருக்கியின் சக்திவள அமைச்சர் ஹில்மி குலர் இது குறித்து சொல்லும்போது “எண்ணெய்க்கான சுரங்கக்குழாய்களை நிர்மாணிப்பதற்கான வளச்சாத்திய கற்கைக்கு சுமார் 10 மாதங்கள் எடுக்கும், குறைந்தது இந்த குழாய்களின் ஊடாக இஸ்ரேலுக்கு 40 மில்லியன் தொன் எண்ணெய் வருடாந்தம் காவிச் செல்லப்படும்” என பெருமையாகக் கூறியிருந்தார்.

அமெரிக்க திட்டத்தின்படி பலஸ்தீனை தாரைவார்ப்பதாய் அமைந்த யூத சியோனிச அரசுக்கும், சிரிய அரசுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முக்கிய சூத்திரதாரியாகவும் அர்துகான் இருந்துள்ளதுடன் 2009 இல் டாவோஸில் இடம்பெற்ற உலக பொருளாதார போரத்தில் பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து காஸாவில் இஸ்ரேல் செய்த கொடுமைகளுக்கு பின்னர் நீங்கள் ஏன் அவர்களுடன் இராஜ தந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவில்லை என்று கேட்ட போது யூத அரசுடன் உறவைப்பேணுவது, உறவைத் துண்டிப்பதை விட சிறந்தது என அர்துகான் கூறிய வார்த்தைகள் எந்நிலை ஏற்பட்டாலும் இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்பதையையே காட்டி நின்றது.

துருக்கி - இஸ்ரேல் இராணுவக் கூட்டுறவு

2006 இல் அமெரிக்காவுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு உடன்படிகைக்கு பின்னர் அர்துகானின் அரசாங்கம் இஸ்ரேலிய சார்பு போக்கிற்கும், துருக்கிய இராணுவ உயர் பீடங்களில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்தோட்டத்தை களையெடுக்கும் வேலைக்கும் பெயர்போன ஜெனரல் புயுகானித் என்பரை இராணுவப்படையினரின் தலைமை அதிகாரியாக நியமித்திருந்தமை இந்த கூட்டுறவை தோலுரித்துக் காட்டியது.

இன்றுவரை துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வலுவான இராணுவ கூட்டணி இருப்பதுடன் இரு தரப்பு படையினரும் குறிப்பாக கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதும்; இஸ்ரேலிய விமானப்படையினர் துருக்கிய விமானத்தளங்களில் பயிற்சி பெறுவதும் வழக்கமாகும். குறிப்பாக அங்காரவுக்கு அருகிலுள்ள படைத்தளத்திலிருந்து அவர்கள் வான்பரப்பில் பரப்பதுண்டு. மேலும் இஸ்ரேல் ஆளற்ற உளவு விமானங்களை குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் தென்கிழக்கு பகுதிகளை நோட்டமிடுவதற்காக துருக்கிக்கு வழங்கியுமிருந்தது. (2010இல் புளோடிலா படுகொலைக்கு பின் தற்காலிகமாக சில பின்னடைவுகள் இதிலே ஏற்பட்டாலும் இந்நிலை விதிவிலக்கானதேயொழிய கொள்கை அடிப்படையானதல்ல.)

துருக்கி  - ஐரோப்பிய உறவு

நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியனில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு துருக்கி ஐரோப்பாவிடம் மண்றாடி வருவது நாம் அறிந்ததே. எனினும் அந்த இலக்கை சாதிப்பதற்காக துருக்கி சிரிய அகதிகள் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதுதான் விசனத்துக்குரியதாகும். தற்போது சிரியாவில் தொடரும் போரின் விளைவால் அங்கிருந்து வெளியேறும் அகதிகள் பிரதானமாக துருக்கியூடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதால் தற்போது ஐரோப்பா மிகப்பெரிய அகதிகள் பிரச்சனையை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இவ்வகதிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஜேர்மனியே அடைக்கலம் கொடுப்பதால் ஜேர்மனி உள்நாட்டில் பல சவால்களை எதிர்நோக்குகிறது. இந்த நெருக்கடியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஓக்டோபர், 2015 இல் ஜேர்மனிய சான்சிலர் அன்ஜெலா மேர்கல் அங்காராவுக்கு சென்று அதிபர் அர்துகானையும், பிரதமர் அஹ்மத் தாவுத்துக்லுவையும் சந்தித்திருந்தார்.

இதன்போது அன்ஜெலா மேர்கல் துருக்கியிடம் அகதிகள் உங்கள் எல்லைகளினூடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை நீங்கள் கட்டுப்படுத்துவதில் உதவ வேண்டும். அதற்கு உபகாரமாக, உங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பது தொடர்பான பேச்சுக்களை மீண்டும் உயிரூட்டுவதற்காக ஜேர்மனி உதவும் எனக் கூறியிருந்தார். அதற்கு அர்துகான், “மேற்கினதும், ஐரோப்பாவினதும் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் எங்களது பாதுகாப்பிலும், ஸ்திரத்தன்மையிலும் தங்கியிருக்கிறது என்பதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். பிரஸல்ஸ்ஸிலே (Brussels) கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுக்களிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் நாங்கள் இல்லாது சாத்தியமில்லை என்றால் நீங்கள் ஏன் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்  சேர்த்துக் கொள்ளக்கூடாது?”  என்று கூறி முஸ்லிம் அகதிகள் பிரச்சனையை தனது கட்சியின் பாராளுமன்ற வெற்றிக்கு அண்மையில் பயன்படுத்தியதைப்போன்றே, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பவாத அரசியலுக்காக பயன்படுத்துவது அவரின் குறுகிய அரசியல் மனோநிலையை வெளிச்சமாய் காட்டுகிறது. பெருந்தொகையான அகதிகளை ஐரோப்பாவுக்குள் நிரப்புவதன் ஊடாக அங்கே பொருளாதார மற்றும் இன ரீதியான பிரச்சனைகளை தோற்றுவித்து ஐரோப்பாவை பலகீனப்படுத்தும் அமெரிக்கத் திட்டத்திற்கு துருக்கி விலைபோகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் விரிசலை அதிகரிப்பதற்காக தற்போது சிரிய அகதிகள் பிரச்சனையை அமெரிக்கா துருக்கியின் ஊடாக கையாளுவதைப் போன்று நீண்ட காலமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தை பலகீனப்படுத்தும் நோக்குடன் தனது நம்பிக்கைக்குரிய முகவரான துருக்கியை அதற்குள் இணைப்பதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.

துருக்கிய முஸ்லிம்களின் விழுமியங்களுடன் எவ்வித ஒற்றுமையும் இல்லாத ஐரோப்பிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றியம் ஒன்றுக்குள் தன்னையும் இணைத்துக்கொள்ள ஆசைப்படும் துருக்கி, தம்மை ஐரோப்பிய ஒன்றியத்திலே சேர்க்காது விட்டால் தாம் ஷங்காய் கோப்பிரேஷன் ஓகனைசேஷனிலே (Shanghai Cooperation Organisation) இணைந்து கொள்ளப்போவதாக ஐரோப்பாவை மிரட்டும் அளவிற்கு அவ்விடயத்தில் விடாப்பிடியாக நிற்கிறது. ரஸ்யாவின் தலைமையில் இயங்கும் அந்த ஷங்காய் அமைப்பு உள்நாட்டிலும், அதன் எல்லைகளுக்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் பெயர்போனது என்பது தெரிந்திருந்தும்கூட இந்த மிரட்டலை அவர் விட்டிருப்பது அரசியல் அசிங்கம் என்பதைவிட வேறு என்ன சொல்வது?

துருக்கிய இஸ்லாமிய மாதிரியின் (Turkey Model) உண்மை நிலை என்ன?

இஸ்லாமிய பழைமைவாதிகள் எனக் கருதப்பட்ட சிலரின் தலைமையில்,

ஒரு மதஒதுக்கல் நாடாக துருக்கி  வழிநடாத்தப்படுவது  AKP இனர் குறித்த நம்பிக்கையை மேற்குலகிற்கு வழங்கியிருக்கிறது. துருக்கிய இராணுவம் மேற்குலகையும், இஸ்லாமியவாதிகளுக்கு எதிரானவர்களையும், தீவிர மதஒதுக்கல் சிந்தனை கொண்டவர்களையும் தம் பக்கம் இழுப்பதற்காக அர்துகான் ஒரு மதச்சார்பற்றவர் என்று நன்றாக தெரிந்திருந்தும்கூட அவரிடம் ஒரு இரகசிய இஸ்லாமியத் திட்டம் இருப்பதாகவும், அவர் துருக்கியின் அனைத்து மட்டங்களிலும் தனது ஆளுமையை நிலைநாட்டியதன் பின்னால் அது வெளிச்சத்துக்கு வரும் எனவும் இடைக்கிடையே பிதற்றினாலும்  AKP  இதுவரை காலமும் நாட்டை வழிநடாத்தும் பாதையும், கடைப்பிடித்து வரும் கொள்கைகளும்; இஸ்லாத்தின் விகிபாகம் அதிலே மேற்பூச்சு மாத்திரம்தான் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சில இஸ்லாமிய சுலோகங்களையும், வீராவேச பேச்சுக்களை வேண்டுமானால் அது அடிக்கடி வெளிப்படுத்துகிறது என்று சொல்லலாமேயொழிய அதற்கு மேலால் அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் ஏதுமில்லை. அர்துகானும், AKP யும் தமது ஆட்சியில் கவனம் செலுத்தும் இரு பிரதான துறைகளான பொருளாதார மற்றும் வெளிவிவகார கொள்கைகளை சீர்தூக்கிப் பார்த்தால் இது நிரூபணமாகிவிடும்.

துருக்கியின் பொருளாதார வளர்ச்சியும், அபிவிருத்தியும், வர்த்தகமும் குறுகிய கால சந்தர்பவாத கொள்கைகளின் விளைவால் ஏற்பட்டவைகளே ஒழிய அதற்கும் இஸ்லாமிய பொருளாதார மாதிரிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இன்றிலிருந்து ஒரு தசாப்த்த காலம் பின்னோக்கிப் பார்க்கும்போது இன்று துருக்கியின் பொருளாதார மேம்பாட்டை யாரும் மறுக்க முடியாது என்றாலும், அந்த அபிவிருத்திகள் அனைத்தும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாத உலகளாவிய வட்டிக்கடன்களை மையப்படுத்தி ஏற்படுகின்ற வளர்ச்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் விளைவு மேற்குலகை இன்று எம் கண்ணெதிரேயே பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். அர்துகானோ, அவரது AKP கட்சியோ தமது உலகளாவிய வர்த்தகத்தை இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்கான ஒரு கருவியாக என்றுமே பயன்படுத்தியது கிடையாது. சீனா, ரஸ்யா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளுடன் தனக்கிருக்கும் நெருங்கிய உறவை இஸ்லாமிய அழைப்புக்கு சாதகமாக பயன்படுத்துவது குறித்து துருக்கி சிந்தித்ததே கிடையாது. சுருக்கமாக சொன்னால் துருக்கியின் வெளிவியுறக் கொள்கையில் இஸ்லாம் பூச்சிய வீதப் பங்களிப்பைத்தான் காட்டுகிறது. இதற்கு ஒரு மிக முக்கிய எடுத்துக்காட்டுத்தான் சியோனிச அரசுடன் அது தொடர்ந்து வைத்திருக்கும் நெருக்கமான உறவு. இஸ்லாமிய புனிதபூமியொன்றை ஆக்கிரமிப்பு செய்த சக்தியொன்றுடனான உறவு இஸ்லாத்தால் முற்று முழுதாக தடுக்கப்பட்டது என்பது மார்க்க ஞானமற்ற முஸ்லிமுக்குகூட தெரிந்த விடயம்.

AKP தலைவர்கள் தம்மைச்சூழ்ந்திருப்பவர்களை இஸ்லாமிய சகோதரர்களாகவும், தமது சொந்தப்பிராந்தியம் உத்மானிய கிலாஃபத்தின் தாய்மடியாகவும் கூறிக்கொண்டாலும், அவர்களின் அரசுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாறாக AKP ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து அமெரிக்க – துருக்கி உறவு மிகமிக ஆழமாகவும், விரிவாகவும் வலுப்பெற்று வருகிறது.  இந்த உறவு முஸ்லிம் உலகிலே அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் கொள்கைகளை மலினப்படுத்துவதற்காகவோ அல்லது அதிலே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவோ வளர்க்கப்படவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அமெரிக்காவின் பிராந்திய மற்றும் சர்வதேசக் கொள்கைகளை அமூல்செய்வதில் ஆர்வத்துடன் பங்காற்றும் முகவராக வேலை செய்வதில் துருக்கி சிறிதளவேனும் வெட்கப்படவில்லை.

2011இல் அமெரிக்கா சார்பாக, பலஸ்தீன பூமியின் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு தாரைவார்க்கக்கூடிய உள்ரங்க பேச்சுவார்த்தைகளில் துருக்கி பிரதான பங்களிப்பை செய்திருந்தமை இதற்கொரு சிறந்த உதாரணமாகும். அமெரிக்கா முஸ்லிம் உலகில் தனது காலனித்துவ நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து விரிபுபடுத்தி வந்தாலும் அது AKP ஐ அமெரிக்காவிடமிருந்து சிறுதளவேனும் தூரப்படுத்தவில்லை. மாறாக எதிர்மாற்றமான சூழலே தொடர்ந்து நிலவுகிறது. ஈராக்கிலும், பலஸ்தீனத்திலும் அமெரிக்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் AKP பக்கபலமாக நின்றதுடன் மாத்திரமல்லாது சிரியாவிலும் அமெரிக்காவுடனும், நேட்டோவுடனும் நெருக்கமாக நின்று ஒத்துழைத்து வருகிறது. அந்த திட்டங்களின் காய்நகர்த்தல்களுக்காக துருக்கிக்குள் இயங்க தனது கதவை அகழத்திறந்தே வைத்திருக்கிறது.

எம்மில் சிலர் துருக்கியை ஒரு வளர்ந்துவரும் இஸ்லாமிய சக்தியாக முட்டாள்தனமாக கருதினாலும், அர்துகான் தான் யார் என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறார். 2012 இல் அர்துகான் எகிப்த்துக்கு சென்று உரையாற்றும்போது, எகிப்தில் “ஒரு சடவாத அரசை எதிர்பார்க்கிறோம்” என தனது ஆவலைத் தெரிவித்திருந்ததுடன், தனது நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்த தனது நாட்டை தான் எவ்வாறு வழிநடாத்துகிறேன் என்பதை ”அடிப்படையில் சுதந்திரங்களையும், மதஒதுக்கலையும் கொண்ட அரசே துருக்கிய அரசாகும்” என்பதாக வரையறை செய்து தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார். இதற்குள் சிலர் இராணுவத்தின் ஆளுமையை படிப்படியாக குறைத்த பின்னர் அர்துகான் புரட்சிகரமான இஸ்லாமிய மாற்றத்தை நாட்டில் கொண்டு வருவார் என பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அர்துகானின் உள்நாட்டு நிகழ்ச்சித்திட்டம் பிரித்தானிய சார்பு கமாலிச இராணுவத்தின் ஆளுமையை அரசியலில் நலிவடையச் செய்து அமெரிக்க சார்பு AKP யின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதேயொழிய இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவது அல்ல.

AKP உள்நாட்டில் கொண்டு வர நினைக்கும் கொள்கைச் சீர்திருத்தங்களைப் பொருத்தவரையில் அதிகாரக் கட்டமைப்பிலும், நீதிபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் தெரிவு முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருவதினூடாக தமது ஆளுமையை அதிகரித்து வருகிறார்கள். அதே நேரம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஊடாக அதிபருக்கான அதிகாரத்தை கூட்டுவதில் கவனம் செலுத்துகிறார்களேயொழிய ஷரீஆவை அரசியலமைப்பின் அடிப்படையாக மாற்றும் படிமுறைகளில் கவனம் செலுத்தவில்லை. மேலும் உள்நாட்டு முரண்பாடுகளை கையாள்வதிலும் AKP  இஸ்லாமிய அளவுகோல்களை கையாளவில்லை. வேறுபாடுகள் எவ்வளவுதான் இருந்தாலும் குர்திஷ்களும் முஸ்லிம்கள்தான் என்ற அடிப்படையில் அவர்களையும் அரவணைத்து சென்றிருக்க வேண்டிய அர்துகான் சில பொழுதுகளில் அவர்களுடன் மிதமான போக்கை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கு எதிராக இராணுவ முன்னெடுப்புக்களை பலமுறை மேற்கொண்டு அவர்களை அழித்து வருவது ஒரு முஸ்லிமின் இரத்தம் கஃபாவை விடப்புனிதமானது என்ற இஸ்லாமிய நிலைப்பாட்டை குழி தோண்டிப் புதைப்பதாகும்.

இவ்வாறு எத்துறையை எடுத்துப்பார்தாலும் உண்மையில் துருக்கிய மாதிரி (Turkey Islamic Model) என்பது இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மாறாக இன்றைய துருக்கி தீவிர தேசியவாதத்தின் மீதும், சந்தர்ப்பவாத இஸ்லாமிய சுலோகங்களை அவ்வப்போது அரசியல் நலனுக்காக பயன்படுத்தும் யுக்தியின் மீதுமே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே ஷரீயத்திற்காகவும், இஸ்லாத்தின் அடிப்படையிலும் அமைந்த ஒரு அரசியல் எதிர்காலத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகுக்குள் அந்த வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய துருக்கிய கட்டமைப்பு போன்ற ஒரு மாதிரியுடன் கலந்து பேசக்கூடிய வாய்ப்பு தமக்கு மிக அதிகளவில் இருப்பதாக மேற்குலகு நம்புகிறது. மேலும் அர்துகான் தனது வலிந்த வியூகங்களினூடாக பிராந்தியத்தில் மேற்குலகின் வெளியுறவுக்கொள்கையின் இன்னுமொரு கருவியாக தன்னை வளர்த்துக்கொண்டிருப்பது அவரை மேற்கிலும் பிராந்தியத்திலும் ஒரு கதாநாயகனாக சித்தரிக்கும் கடப்பாட்டை மேற்குலகுக்கு வழங்குகிறது.

சடவாதத்தை தனது அடிப்படையாக தேர்ந்தெடுத்த உடனேயே இஸ்லாத்தின் எவ்வம்சத்தை நடைமுறைப்படுத்துவது, எவ்வம்சத்தை புறந்தள்ளுவது என்று தீர்மானிக்கும் உரிமை ஒரு அரசுக்கு வந்து விடுகிறது. இதனது விளைவுதான் மக்களின் இஸ்லாமிய தாகத்தைத் தணிப்பதற்காக ஹிஜாப் தடையை நீக்க நினைத்த அர்துகானுக்கு இன்றுவரை விபச்சாரத்தையும், வட்டி வங்கிகளையும் தடைசெய்யத் தோன்றவில்லை. இந்த சந்தர்ப்பவாத தேர்வும், தவிர்ப்பும் கொண்ட போக்குடன் இஸ்லாத்தை அணுகும் ஒரு தலைவருடன் மிக நீண்ட காலத்தை ஓட்டலாம் என்ற முதிர்ச்சி மேற்குலக்கு இருப்பதால் அவர்கள் அர்துகானின் துதிபாடுவது வியப்பானதல்ல. துருக்கிய மாதிரியை முஸ்லிம் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் சிபார்சு செய்து வருவதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனினும் அல்லாஹ்(சுபு) பார்வையில் இந்த தேசியவாத, சந்தர்ப்பவாத, சுயநலனை அடிப்படையாகக் கொண்ட போக்கு மிகுந்த கண்டனத்துக்கும், தண்டனைக்கும் உரியதாகும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

நாம் மேற்சொன்ன தரவுகளும், கருத்துக்களும்; சில இஸ்லாமியவாதிகளால் பரப்புரை செய்யப்படுவதைப்போல், AKP க்கும் இஸ்லாத்துக்குமான தொடர்பு மிக மிக குறுகியதாகும் என்பதை நிறுவப்போதுமானதாகும். AKP இன் கொள்கைகள் பிராந்திய ஆதிக்கத்திற்காகவும், ஐரோப்பிய தேசங்களுடன் போட்டி போட்டு வளர்வதற்காகவும் உருவாக்கப்படுகின்றதே ஒழிய வேறு எதற்காகவுமல்ல. அதற்கு இஸ்லாத்தை ஒரு விளம்பர உத்தியாக பயன்படுத்துகிறார்கள். சுற்றியிருக்கின்ற சடவாத ஐரோப்பிய தேசதங்களில் எவ்வாறு அதன் தலைவர்கள் தத்தமது நாடுகளை முன்னணிக்கு கொண்டுவர பாடுபடுகிறார்களோ, எவ்வாறு அதன் தலைவர்கள் தமது சொந்த அதிகாரங்களை கூட்டிக்கொள்ள அதீத கரிசனை காட்டுகிறார்களோ அதனை ஒத்ததே அர்துகானின் செயற்பாடு என்பதைத் தவிர அவரை ஒரு நம்பிக்கை நச்சத்திரமாகக் கருதுவது இறுதியில் எமக்கு ஏமாற்றத்தைத்தான் பெற்றுத்தரும். மேலும் இன்று AKP   வழிநடாத்தும் துருக்கியின் நலன்கள் அமெரிக்க நலன்களுடன் மிக நெருக்கமான பிணைப்புடனே வளர்ந்து வருகின்றமை அர்துகானின் பாதையின் விபரீதத்தை உணர்த்தப் போதுமானதாகும்.

எவ்வாறு சவூதியும், ஈரானும், எகிப்த்தும் தம்மை ஆட்சிக்கட்டியில் அமர்த்திப் பாதுகாக்கும் மேற்குலகுக்கும் அமெரிக்காவுக்கும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க முனைகிறார்களோ அதே கைக்கூலி அரசியலைத்தான் சற்று வித்தியாசமான முறையில் துருக்கி செய்து வருகிறது.

இதுபோன்ற யார் எக்கேடு கெட்டாலும் தாம் தலைத்தோங்க வேண்டும் என்று நினைக்கின்ற சுயநல அரசியல் தலைமைகளாலும் அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளாலும் முஸ்லிம் உம்மத் என்றும் மீட்சி பெறப்போவது இல்லை. இன்றைய துருக்கி உட்பட முதலாளித்துவ சடவாத அரசுகள் எங்கு நிலைபெற்றாலும் அநீதிக்கும், முறையற்ற வளப்பங்கீட்டுக்கும், மோசடிகளுக்கும், சமூகச் சீரழிவுகளுக்கும் அடிப்படையாக அவை அமைந்ததே வரலாறு. துருக்கிய தலைவர்களும், அவர்களை சாணக்கியர்களாகப் பார்க்கும் குறை பார்வை கொண்ட இஸ்லாமியவாதிகளும் இந்த உளுத்துப்போன, பரீட்சித்துப்பார்த்து பயனற்றுப்போன பாதையையே தொடர்ந்து சரிகாண்பார்களானால் இவர்களின் சிந்தனை மலட்டை அல்லாஹ்(சுபு)தான் நீக்க வேண்டும்

இஸ்லாத்தின் முலாம் பூசி சடவாத முதலாளித்துவ மாதிரிகளை உம்மத்திடம் விலைபேசும் அர்துகானினதும், AKP யினதும் வெற்றி எவ்வாறு எமது வெற்றியாக அமைய முடியும்?

யா அல்லாஹ்! எம்மை மீட்பார் யாருமில்லையா? என சிரியாவிலும், பலஸ்தீனிலும் உம்மத் கதறியழும் போது நோட்டோவில் அமெரிக்காவுக்கு அடுத்த பலம்பொருந்திய படையைக் கொண்டிருக்கும் துருக்கியால் அவர்களின் விடுதலைக்காக ஒரு சிப்பாயையேனும் அனுப்ப முடியாத கோழைகளை மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளபோது எவ்வாறு இஸ்லாமியத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வது?

எனது பார்வையில் இவர்கள் ஒரு பக்கம் கோமாளிகளாகவும், மறுபக்கம் அயோக்கியர்களாகவுமே தெரிகிறார்கள்.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh